பக்கம் : 399
 

     (இ - ள்.) புல்லிய பொலங்கொம்பு ஒப்பார் - தழுவிய பொன்கொடியை ஒத்த காதன்
மகளிர்கள், புலவியுள் - ஊடலிடத்தே, கலவிசென்று - தம் மனத்தூடே ஊடல்தீர்ந்துகலந்து
முயங்கும் கருத்துண்டாதலாலே, மெல்லிய மாலை தம்மால் - தமது மென்மைமிக்க
மலர்மாலையாலே, விசித்தலை - தன்னை ஒறுப்பாராகக் கட்டுதலை. விடுத்தும் - தவிர்த்தும்
மீட்டு - மீளவும், மல்லுயர் அலர்ந்த மார்பின் - தன் மற்போர்வல்ல அகன்ற
மார்பினிடத்தே, மாதவிப்பேதை - மாதவி என்னும் மகளால், ஆர்த்த - கட்டப்பட்ட,
வல்லிகள் - கொடிகளின் கட்டுக்களை, விடுக்கமாட்டா - தவிர்க்க விரும்பாத, மனத்தினன்
ஆனான் - மனத்தை உடையவன் ஆயினான், மன்னன் - அவ்வாகுவலி வேந்தன்,
(எ - று.)

மாதவி - குருக்கத்தி. குருக்கத்திக் கொடிகள் தன்மேலே படர்ந்து பின்னவும் அவற்றை
அகற்றாதவனாய், அடக்கிய மனத்தை யுடையான் ஆயினன் என்க.

( 129 )

வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்

560. ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்.
 

     (இ - ள்.) ஓவல்இல் குணங்கள் என்னும் - நீங்குதல் இல்லாத குணங்கள் என்கின்ற,
ஒளி மணிக்கலங்கள் தாங்கி - விளங்குகின்ற மணியணி களைப்பூண்டு, தேவர்கள் உலகம்
எல்லாம் - தேவலோகமெல்லாம், செழு மணம் அயர்ந்து - மிகுந்த மணம் பொருந்தி,
கூட்ட - வீச, கேவலப் பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை தன்னை - கேவலப்
பெண் என்று பெயர் பூண்ட ஒப்பற்ற விளங்குகின்ற ஒளியையுடைய மடந்தையை, ஆவியுள்
அடக்கி - தனக்குள்ளே ஒரு பகுதியாகக்கொண்டு, பின்னை - பிறகு, அமரர்க்கும் அரியன்
ஆனான் - தேவர்கட்கும் அரியவன் ஆனான், (எ- று.)

வாகுவலிமன்னன் உயரிய பண்புகளை மேற்கொண்டு தேவர்களினும் சீர்த்திபெற்ற
நிலைமையை எய்தினான். கேவலப்பெண் - கேவல ஞானமாகிய பெண். “கேவலமடந்தை“
என்றார் சீவகசிந்தாமணியாரும். கேவலம் - வீடுபேற்றுநிலையாகிய முடிவுநிலை. மேலும்
“முடிவென்னும் பெண்ணரசி தன்னை“ என்றும், “முடிவென்னும் பூங்கொடியும்“ என்றும்
கூறுவார்.