(இ - ள்.) எங்கள்கோன் இவன்கண் நின்று - எம் தலைவனாகிய இவனிடத்திருந்துவந்த, மிக்கு உயர் குலத்து - பெரிதும் உயர்ந்த குலத்தில் தோன்றிய, வேந்தர் - அரசர்கள், தங்கள் - தங்களிடத்திலே, ஓர்புறஞ் சொல்வாராத் தன்மையால் - ஒரு பழிச் சொல்வராத தன்மையோடு, உலகம் காத்தார் - உலகத்தைப் பாதுகாத்தார்கள், அங்கு அவர் வழிக்கண் தோன்றி - அத்தன்மையுடைய அவர்களின் வழியிலே பிறந்து, அகல் இடம் வணங்க நின்ற - இந்நிலவுலகத்தார் வணங்கும்படியிருக்கின்ற, இங்கு இவன் பெருமை - இங்கிருக்கின்ற இந்த அரசனுடைய பெருமையை, ஏந்தல் நீயும் - சிறந்தவனாகிய நீயும், அறிதியால் என்றான் - அறிவாய் என்று கூறி முடித்தான், (எ - று.) எங்கள் குலத்து அரசர்கள் ஒருவகையான பழிச்சொல்லும் அற்றவர்கள்; இந்தப் பயாபதி மன்னவனுடைய பெருமையை நீயும் அறிவாய் என்றுகூறி இத்துடன் பயாபதி மன்னவனுடைய வேள்வியாசான் தன் உரையை முடித்துக்கொள்கிறான். |