பக்கம் : 401 | | (இ - ள்.) குடித்தொடர் இரண்டும் கேட்டு - சுவலனசடி பயாபதி என்னும் இருதிறத்தவரின் வழிமுறைச் செய்தியையும் கேட்டு, இருந்த வேந்தர் - அங்குக் கூடியிருந்த அரசர்கள், குறுமயிர் எறிந்து - மயிர்க்கூச்செறிந்து, கண்ணுள் - கண்ணினுள்ளே, பொடித்த நீர்த்திவலை சிந்தப்புகழ்ந்தனர் - திவலை திவலையாகத் தோன்றிய நீர்த்துளி கீழேவிழ இருமரபையும் புகழ்ந்து பேசினார்கள், அடுத்து எரி அலர்ந்த செம்பொன் - உடனே நெருப்பிற்காய்ச்சி யுருக்கிய மாற்றுயர்ந்த பொன்னாலியன்ற, அணிமணி முடியினான் - அழகிய மணிகள் அழுத்திய முடியினையுடைய பயாபதி மன்னன், அங்கு - அப்போது, எடுத்து உரைகொடாத முன்னம் - மேற்கொண்டு செய்தியை எடுத்துப் பேசத்தொடங் குவதற்கு முன்பு, கேசரன் இதனைச்சொன்னான் - மருசியானவன் மேற்செய்யுளில் வருஞ்செய்தியைச் சொல்லலானான். (எ - று.) சுவலனசடி பயாபதி ஆகிய இருமன்னர்களின் வழிமுறை வரலாறுகளையுங் கேட்டு அங்கிருந்த மன்னர்கள் இன்பக்கண்ணீர் சொரிந்தனர். பயாபதி மன்னன் பேசத் தொடங்குவதற்கு முன்பு மருசி மேலும் பேசலானான். | ( 132 ) | வாகுவலி கச்சனுக்கு மருகன் என்று கூறுதல் | 563. | இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை அப்படி யரிய செய்த வடிகளெம் 1மரச னாய கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென் றொப்புடைப் புராண நன்னூ 2லுரைப்பதியா னறிவ னென்றான். | (இ - ள்.) இப்படித்து ஆயின் - குலவரலாறு இவ்வாறாக இருக்கு மானால், சுற்றம் - இருகுலத்துக்கும் உறவு முறைத்தன்மை, பண்டை இசைந்தது - முன்னரே அமைந்து நின்றது, என்னை - அஃதெவ்வாறெனின், அப்படி அரிய செய்த அடிகள் - அவ்வாறு அருமையான தவத்தைச் செய்த பெரியோன், எம் அரசன் ஆய - எம்முடைய அரசனான, கைபுடை இலங்கு செவ்வேல் - கையினிடத்து விளங்குகிற செவ்விய வேலையுடைய, கச்சற்கு - கச்சனென்பானுக்கு, மருகனார் என்று - உடன் பிறந்தாள் மகன் என்று, ஒப்பு உடை - செய்திகளை ஒப்பச் சொல்லுதலையுடைய, புராண நன்னூல் உரைப்பது - சிறந்த புராண நூலிற் சொல்வதை, யான் அறிவன் என்றான் - நான் உணர்வேன் என்று சொன்னான், (எ - று.) கச்சன் என்று கழறப்பெற்றவனுக்கு, வாகுவலி என்பானை மருகன் என்று எம்முடைய புராண நூலில் கூறியிருத்தலால் இருகுலத்தார்க்கும் உறவுமுறை முன்னரே அமைந்து கிடந்தது என்று மருசி குறிப்பிட்டான். அத்தைமகனை மருகன் என்றலும் உண்டு. பண்டை - ஐயீற்றுடைக் குற்றுகரம். | ( 133 ) |
| (பாடம் 1 1. மரைசன். 2. லுரைப்பக் கேட்டறிவன். | | |
|
|