பக்கம் : 41
 

     மொய்க்கின்ற வண்டுகளும் காணப்படுவதால் அக்கடைத் தெருக்கள்; வளம் கொள்பூம்
கற்பக வனமும்போலும் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தேகொண்ட அழகிய
கற்பகச் சோலையையும் ஒத்திருக்கும். (எ- று.)

     போதனமா நகரத்துக் கடைவீதி அழகிய கற்பகச்சோலையைப் போன்ற தென்க.
கற்பகமரங்கள் மாலையாகப் பூக்கும் என்பர். கற்பகச்சோலையைச் சேர்ந்தவர்கள் வேண்டிய
பொருளை வேண்டியவாறு பெறுவதுபோல இக்கடைத் தெருவை யடைந்தவர்களும்
வேண்டியவைகளை வேண்டியவாறு அடைவர் என்க. தேவர்கள் அணிந்துள்ள போது
அவர்களுடைய மாலையில் வண்டுமொய்த்தல் இராதேயன்றி அவர்கள் அணியாதபோது
வண்டு மொய்த்தல் உண்டுபோலும்.

( 10 )

சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறு அன்னங்கள்

46. காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.
 
     (இ - ள்.) காவிவாய் கருங்கணார் - கருங்குவளை மலரின் தன்மை யமையப்பெற்ற
கரிய பெரிய கண்களையுடைய பெண்களினது; காமர் பூ சிலம்பு - அழகிய
விளக்கத்தையுடைய காலணிகள்; ஆவிவாய் மாளிகை - அகிற்புகைபொருந்திய வீடுகளிலே;
அதிரக் கேட்டொறும் - ஒலிக்கக் கேட்கும்பொழுதெல்லாம்; தூவி வான்பெடை -
ஆண்டுவளர்க்கப்படும் தூவியையுடைய சிறந்த பெடையன்னங்கள்; துணை துறந்த
கொல்என - தம் துணையாகிய ஆண் அன்னங்களை நீங்கினவோ என்று; வாவிவாய் -
தடாகத்திலே உள்ள; இள அனம் மயங்கும் - இளமையுடைய அன்னங்கள் மயங்கி
வருந்துதலையடையும். என்ப - ஏ, ஈற்றசைகள். (எ - று.)

     காவி-கருங்குவளை. காமர் - அழகு, மாளிகையிடத்தே உண்டான சிலம்பொலியை
மாடத்துள்ள அன்னப்பெடையின் குரலென்று கருதி வாவியிலுள்ள அன்னங்கள் அவை
துணை பிரிந்தனவோ என்று அவற்றிற் கிரங்கின என்பது கருத்து. இது மயக்கவணி.
அன்னங்கள் துணைபிரியிற் பெரிதும் வருந்து மியல்புடையன; இதனை “புல்லு விட்டஞ்சிறை