யுடைய அவதிஞானமுடையாரைப்போல, உணர்ந்தபின் - தெளிந்த பிறகு, அது - அப்பொருளை, கோதுஇல் கேள்வியான் - குற்றமில்லாக் கேள்வியறிவு மிக்க தூதன், தொழுது அரசனை வணங்கி, கூறினான் - சொல்லத் தொடங்கினான், (எ - று.) “கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி“ என்னும் திருக்குறள் கருத்தை ஒப்பு நோக்குக. தெய்வத் தன்மையுடைய ஞானிகள் பிறர் கருத்தைத்தாமே தெரிந்து கொள்வதுபோல் சடி தெரிந்துகொண்டான் என்க. ஓதிஞானி - அவதிஞானத்தையுடைய பெரியோர். “கற்றவைம் பதங்க ணீராக் கருவினை கழுவப் பட்டு மற்றவன் றேவ னாகி வானிடு சிலையிற் றோன்றி இற்றத னுடம்பு மின்னாவிடரொழித் தினிய னாகி உற்றவ னிலையு மெல்லாம் ஓதியின் உணர்ந்து கொண்டான்“ (சிந்-குண. - 101) என்னும் சிந்தாமணியானும் “ஓதி“ அவதிஞானமாதலை அறிந்து கொள்க.
|
(இ - ள்.) மதம் - மூன்று வகையான மதநீரை, பில்கும் - பொழியும், பிணர்க்கை - சருச்சரையமைந்த துதிக் கையையுடைய, யானையாய் - யானைப்படையுடைய வேந்தே, வாழி - நீ நீடுவாழ்க!, நின் - உன்னுடைய, வென்றி வார் கழல் - வெற்றிக்கு அடையாளமாகக் கட்டப்பட்ட நீண்ட கழலினையுடைய அடிகள், வெல்க - வெற்றி எய்துக!, தீயன - தீமைகள், செல்க - ஒழிக!, நின் புகழ் - உனது புகழ், சிறக்க - சிறந்து ஓங்குமாறு, மல்க - பெருகுக!, நின் பணி - அரசே உன்னுடைய கட்டளையாகிய காரியத்தை, முடித்து - நன்கு செய்து முடித்து, வந்தனன் - வந்துள்ளேன், (எ - று.) சிறக்க - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், மும்மதம் - யானையின் கன்னம், கை, கோசம் என்னும் மூன்றிடங்களினின்றும் பெருகும் மதநீர். சருச்சரை - பிணர் என்பன, சொரசொரப்பு என இக்காலத்தார் வழங்கும் பொருளுடையன. யானையாய்! வெல்க! வாழி! செல்க! புகழ்சிறக்க மல்க! பணி முடித்து வந்தனன் என்றான், என்க. |