பக்கம் : 412
 

 

580.

1முள்ள 2ரைப்பசு முளரி யந்தடத்
துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
கள்ளி ரைத்துகக் கண்டு 3வண்சிறைப்
புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்.
 

     (இ - ள்.) முள் அரைப் பசு முளரி - முள் நிறைந்த நாளங்களை யுடைய பசிய
நிறமமைந்த தாமரை அடர்ந்த, அம்தடத்துள் - அழகிய குளத்தினுள்ளே, இரைந்து எழும்
ஒலி செய் வண்டு இனம் - ஒய் எனும் இரைச்சல் உண்டாம்படி எழுந்து இசைபாடுதலைச்
செய்கின்ற பலவகை வண்டுகளும், கள் இரைத்து உகக் கண்டு - அங்ஙனம் எழுந்தோறும்
ஓசையுடனே தேன் துளிப்ப அத்தேன் ஒழுகுதலைப் பார்த்து, வண் சிறைப்புள் - வளமிக்க
சிறகுகளையுடைய பறவைக் குழாங்கள், இரைப்பதோர் - மகிழ்ச்சியாலே ஆரவாரித்தற்கு இடமாகவுள்ள ஒரு, பொய்கை சார்ந்ததும் - குளத்தின் பக்கத்தே சென்றதும், (எ - று.)
தம் சிறகுகளினின்றும் தேன்றுளிக்க ஒய் யென்றிரைந்தெழும் வண்டினங்களைக் கண்டு பறவைகள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தன என்க.
 

( 8 )

 
581.

நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்
பத்தி சித்திரப் பலகை வேதிகை
சித்தி ரங்களிற் செறிந்து காமனார்
அத்தி ரம்மென அசோகங் கண்டதும்.
 
 

      (இ - ள்.) நித்திலம் மண் நிரந்து - முத்துக்களையும் மாணிக்கங் களையும்
நிரலாகப் பதித்து, வெள்ளி வேய் - வெண் பொன்னாலாகிய தகட்டால் மூடிய, சித்திரம்
பத்தி பலகை - சித்திரிக்கப்பட்டு நிரலாக அமைக்கப்பட்ட பலகைகளையுடைய, வேதிகை -
சுற்றுத் திண்ணையின் இடையே, சித்திரங்களிற் செறிந்து - ஓவியங்களில் நிறைந்த,
காமனார் அத்திரம் என - மன்மதனுடைய பகழிச்சாலையைக் கண்டாற்போல, அசோகம்
கண்டதும் - அசோகமரம் நின்ற காட்சியைக் கண்டு இன்புற்ற செய்தியும், (எ - று.)

      சுற்றுத்திண்ணையின் இடையில் தழைத்து மலர்ந்து நின்ற அசோக மரம், மன்மதன் அத்திரசாலையைச் சித்திரத்தில் செறிய எழுதி வைத்ததை ஒத்துத் தோன்றுகின்றது என்க. மதனன் மலரம்புகள் ஐந்தனுள் அசோகமலர் ஒன்றாதலின் அசோகமரத்தை அத்திரசாலை என்றார். அத்திரம் - அத்திரசாலை, ஆகுபெயர், செறிந்து என்பதைச் செறிந்த எனத் திரித்துக் கொள்க. அசோகம் அருகன் வீற்றிருத்தற்கு நீழல் கொடுக்குமர மாகலின் சமண்மதத்தோர் அம்மரத்தைச் சூழவேதிகை யியற்றிப் போற்றுதல் மரபு என்க.

( 9 )


     (பாடம்) 1. முள்ளுறை. 2. ரைப் பசுந் தாமரைத் தடத்தை. 3. வண்டறை.