பக்கம் : 416
 

 

588.

ஓட்டி றானையா னோலை வாசகங்
கேட்ட 1மன்னவன் கிளர்ந்த 2சோதியன்
மீட்டொர் 3பொற்கொடா விம்மி தத்தனா
யீட்டு 4மோனியா யிருந்த பெற்றியும்.
 

     (இ - ள்.) ஓலை வாசகம் கேட்ட - ஓலையின்கண் பொறித்துள்ள செய்திகளைக்
கேட்டறிந்த, ஓட்டுஇல் தானையான் - பகைப்புலத்துப் புறங்கொடுத்து ஓடாத வீறுடைய
படையுடையவனாகிய, மன்னவன் - பயாபதி அரசன், கிளர்ந்த சோதியன் - (அகத்தழகு
முகத்துத் தோன்றுதலின்) கிளர்ந்தெழுந்த முகவொளியுடையனாய், மீட்டொர் சொல்கொடா
- மறுமொழியாக ஒரு சொல்லேனும் சொல்ல வியலாமைக்குக் காரணமான, விம்மிதத்தனாய்
- மருட்கையுடையவனாய், ஈட்டு மோனியாய் - பெருமையுடைய மௌனத்தையுடையவனாய்,
இருந்த பெற்றியும் - இருந்ததன்மையும், (எ - று.)

     ஈட்டுமோனி - பெருமையுடைய மோனி. ஈடு - பெருமை. ஓடாத தானை வேந்தன்
ஓலை வாசகம் கேட்டு உளநிறைந்த மகிழ்ச்சியுடையனாய் மருண்டு வாய்வாளா விருந்ததும்
(கூறினான் என்க.)
 

( 16 )

 
589.

இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்
வருந்தி மற்றவன் மறுத்த வண்ணமும்
புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு
மருந்த கைத்தொடர் பமைந்த வாக்கமும்.
 
 

      (இ - ள்.) இருந்த மன்னன்மேல் - அங்ஙனம் மோனியாய் இருந்த அரசனை நோக்கி, எடுத்த மாற்றமும் - தான் எடுத்துச் சொன்ன உரைகளும், மற்றவன் வருந்தி - தன் உரை பொறாது அப் பயாபதி மன்னன் வருத்தத்தோடு, மறுத்த வண்ணமும் - அதனை மறுத்துரைத்த தன்மையும், தொல்குலம் புரிந்து புகன்ற பெற்றியும் - இருவருடைய குலங்களின் பழம் பெருமைகளை விரும்பிக்கூறிய தன்மையும், அருந்தகைத் தொடர்பு அமைந்த ஆக்கமும் - அங்ஙனம் கூறிவரும்பொழுது இருபெருங் குலங்களுக்கும் பண்டு தொடர்பிருந்த அரியதொரு தகுதியமைந்திருத்தலை அறிந்து கொண்டமையால் உண்டாய ஆக்கமும், (எ - று.)

     ஆக்கம் - தான் விரும்பிய செயலுக்கு உதவியாதல்.

 

     (பாடம்) 1. மன்னனே. 2. சோதியான். 3. சொற்கொடான். 4. கேள்வியானி.