பக்கம் : 419 | | (இ - ள்.) கற்றநூல் எலாம் - யாம் கற்ற உயரிய நூல்கள் அனைத்தும், பிறர் கற்ற நூலெலாம் - தேயம் மொழி காலம் சமயம் முதலியவற்றால் வேறுபட்ட பிறர் ஓதிய நூல்கள் அனைத்தும், முற்ற நோக்கினும் - அவன் பெருமைகளை எஞ்சாது எடுத்துரைக்க முயன்று பார்த்தாலும், முற்ற நோக்கல - அம்மெய்ந்நூல்கள் தாம் தாம் கண்ட பெருமைகளையே காட்டுவனவன்றி அப்பயாபதி வேந்தன்பாலமைந்த பெருமைகள் அனைத்தையும் தாம் கண்டு காட்டமாட்டா; இனி, உற்ற நூல் எலாம் - பொருள் பொதிந்த நூல்கள் என்று போற்றப்படும் நூல்கள் எல்லாம், உற்ற நூல்களாப் பெற்றநூல் - மெய்ம்மையுற்ற நூல்களாகப் பெறப்பட்ட ஒரு மெய்ந்நூல் யாதெனின், அவன் பெற்றி வண்ணமே - அஃதவன் பெருமைத்தன்மை யென்னும் நூலேயாம், (எ - று.) பயாபதி வேந்தன்பால் இயல்பினமைந்த பெருமைகள் அனைத்தும் நூல்களிற் காணப்படமாட்டா; அவன்பால் அமைந்த பெருமைகள் சிலவற்றைக் கண்டுரைப்பவற்றையே நாம் மெய்ந்நூல்கள் என்று போற்றுகின்றோம் ஆதலின் எல்லா மெய்ந்நூல்களுக்கும் அவன் முதனூலாக விளங்குகின்றான் என்பதாம். “எனைத்துள மறை அவை யியம்பற்பாலன, பனைத்திரள் கரக்கரிப் பரதன் செய்கையே“ என்னும் கம்பநாடர் வாக்கில் இக்கருத்தைக் கண்டு கொள்க. | ( 21 ) | | 594. | எரியு 1மாணையான் குளிரு 2மீகையான் 3பெரியன் பெற்றியாற் 4சிறிய னண்பினா னரியன வேந்தர்கட் கெளிய 5னாண்டையர்க் குரிய னாங்குதற் கோடை யானையான். | (இ - ள்.) எரியும் ஆணையான் - வெய்தாகிய ஆணையையுடை யவன், குளிரும் ஈகையான் - குளிர்ச்சியை நல்கும் வள்ளமையுடையான், பெற்றியாற் பெரியன் - பண்புடைமையால் மிக உயர்ந்தவன், நண்பினால் - நண்பர்களுக்கு, சிறியன் - கீழாயவன, வேந்தர்கட்கு - அரசர்களுக்கு, அரியன் - காண்டற்கும் அருமையானவன், ஆண்டையர்க்கு எளியன் - அவன் குடைநீழற் கீழ் வாழ்வார்க்குக் காட்சிக்கு மிக எளியவன், ஓடை யானையான் - முகபடாத்தையுடைய யானைப் படைமிக்க அப் பயாபதி மன்னன், ஓங்குதற்கு - இவ்வாற்றால் மேலும் புகழ் பெருகுதற்கு, உரியன் - உரியவனாவான், (எ - று.) “காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல். மீக்கூறு மன்ன னிலம்“ (திருக்குறள் 386) என்பவாகலின் இத்தகைய சிறப்புடைய பயாபதி வேந்தன் பலராலும் மீக்கூறப்பட்டு ஓங்குதற்குரியன் என்றான் என்க. | ( 22 ) |
| (பாடம்) 1. ஆணையாற். 2. ஈகையாற். 3. பெரிய மாண்பினாற். 4. சிறியன்னபினால். 5. மாந்தர்கட். | | | |
|
|