பக்கம் : 420
 

 

595.

எல்லை நீருல கினிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
யில்லை யேலுல கில்லை யாமென
நல்ல னேயவ னாம வேலினாய்.
 

     (இ - ள்.) நீர் எல்லை உலகு - கடலை எல்லையாகவுடைய இவ்வுலகம், இனிது
கண்பட - இன்புற்று உறங்கிக்கிடக்கும்படி, விளங்கும் - திகழ்கின்ற, வெல்லும் வேலவன்
தண் அளி - பகைவரை வென்று மேம்படும் வேலேந்திய பயாபதி மன்னனுடைய குளிர்ந்த
அருளுடைமை, இல்லையேல் - இல்லையாய் ஒழியின், உலகு இல்லை - இவ்வுலகியல்
நன்கு நிகழ்தலும் இல்லையாய் ஒழியும், என - என்று அறிஞர் உரைக்கும்படி; அவன்
நல்லனே - அப் பயாபதி மன்னன் நன்மையுடையவன் ஆவன், நாமவேலினாய்-
பகைவர்க்கு அச்சம் நல்கும் வேலேந்திய வேந்தே! (எ - று.)

“பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன்
மண்புக்கு மாய்வது மன்“

என்னும் திருக்குறளை ஒப்பு நோக்குக. “உண்டா லம்ம இவ்வுலகம்.... .........உண்மை யானே“
என்னும் புறப்பாட்டின் கருத்துடையது இச்செய்யுள் என்க.
 

( 23 )

 
596.

கற்ற நூலினர் கலந்த 1காதலா
லுற்ற போழ்துயிர் கொடுக்கு 2மாற்றலாற்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற 3மாண்பினர் சுடரும் வேலினாய்.
 
 

      (இ - ள்.) சுடரும் வேலினாய்! - ஒளிதரும் வேற்படை வேந்தே!. கொற்ற வேலவன்
குடையின் நீழலார் - வெற்றி வேலேந்தும் போதன மன்னனுடைய குடையின் நீழலில்
வாழும் மாந்தர் எல்லாம் கற்றநூலினர் - ஓதிய நூலறிவு மிக்கவர், உற்றபோழ்து - தம்
வேந்தர்க்கு இடுக்கண் வந்துற்ற பொழுது, உயிர் கொடுக்கும் ஆற்றலால் - தம்முயிரையும்
கொடுத்து அவ் விடுக்கணகற்ற முனையும் பேராற்றல் உண்மையானும்; கலந்த காதலால் -
வேந்தன்பால் அகமும் புறமும் ஒன்றுபட்ட மெய்யன்புடைமையாலும், சுற்றமாண்பினர் -
அரசனது மெய்மைச் சுற்றத்தார் போன்ற மாட்சிமையுடை யவர் ஆவர், (எ - று.)

     பயாபதி வேந்தன் குடைநிழல் வாழ்வார் எல்லாம் அவன்பால் மெய்யன்புடையரும்,
அரசனுக்கு இடுக்கண் வராதபடி தம்முயிரையும் கொடுத்துப் பாதுகாப்பவரும் ஆகலின்
அரசனுடைய சுற்றத்தார் போல்வார் என்பதாம்.

( 13 )


     (பாடம்) 1. காதலர். 2. மாற்றலர். 2. மாண்பிது.