(இ - ள்.) கோது இலர் - அவன் குடையின் நீழலார் குற்றம் இல்லா தவரும், குலமக்கள் - உயர்குடியிற் பிறந்தவரும், கல்வி கேள்விகளிற் சிறந்தவருமே ஆவர், இயைந்தது இன்மையார் - அவன் குடை நீழலில் பொருந்துதல் இல்லாதார், மாக்கள் மற்று ஏதிலர் - கல்லாதாரும் பகைமையுடையாரும் இன்னோரன்னாரும் ஆவர், ஆதலால் - இங்ஙனம் இருந்தவாற்றால், அங்கு - அச்சுரமை நாட்டில், ஓதில் - ஆராய்ந்து கூறுங்கால், அவர்க்குள் - அங்கு வாழ்பவர்க்குள்ளே, தமர் பிறர்கள் ஆவது - ஒருவர்க்கொருவர், தமராகவாதல் பகைவராகவாதல் கண்டு கூறுவதற்கு, அஃது - அவ்வேற்றுமை, இல்லையே - இல்லை, (எனவே இயலா தென்பதாம்) (எ - று.) பகையின்மையால் உறவு மில்லை என்க. “கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்விமுற்ற வல்லாருமில்லை“ என்னுங் கம்பநாடர் செய்யுளோடு “ஆதலால் தமர் பிறர்கள் ஆவது அங்கு ஓதில் இல்லையே“ என்னும் இவ்வடியை ஒப்பிடுக. |
(இ - ள்.) செய்ய கோலினாய் - செங்கோன் முறை தவறாத அரசனே; ஐயதாரினான் - அழகிய மாலையணிந்த பயாபதி மன்னன், வையம் இன்புறின் - தன்குடை நீழல் வாழ்வோர் இன்பம் எய்தும்பொழுது, தானும் இன்புறும் - அவர்கள் எய்திய இன்பத்தைத் தான் எய்தியதாக எண்ணிமகிழு வான், வெய்யது ஒன்றுறின் - அங்ஙனமின்றி அவர் யாதானுமொரு துன்பத்தை எய்தியபொழுது, தானும் வெய்துறும் - அது பொறானாய்த்தானும் துன்புறுவான், மன்னன் அருளின் வண்ணம் ஏ - செங்கோன் மன்னனாகிய பயாபதியின் அருட்பெருமை, செப்பலாவது அன்று - இங்ஙனமாகலின் இயம்பும் எளிமைத்தன்று (எ - று.) |