(இ - ள்.) வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தன் - வெற்றியையுடைய புகழால் நீண்ட குடையையுடைய அரசர்க்கரசனாகிய சடிவேந்தன், மற்றவன்றனை மனைபுகப் பணித்து - மரீசியை அவனது இல்லத்திற்குச் செல்ல விடைஈந்து, உற்ற மந்திரத்தவர்களோடு இருந்து - தனக்குப் பொருந்திய அமைச்சர்களோடு கூடி (மந்தணத்தே) அமர்ந்து இருந்து, நாம் இனிச்செய்வது எற்று என்றனன் - (அமைச்சரை நோக்கி) “யாம் இனிச் செய்யற்பாலது யாது“ என்று வினவினான், (எ - று.) இனி என்றது, மரீசி தூதுபோய்த் திவிட்டநம்பிக்கு நம் சுயம்பிரபையை அளிப்பதற்குரிய செய்தி கொணரப்பெற்ற பின்னர் என்றபடி. மரீசியை அவன் மனைபுகப் பணித்துச் சடிமன்னன் அமைச்சரோடிருந்து சுயம்பிரபையின் திருமண வினைபற்றி யாம் இனிச் செய்யற் பாலதியாதென வினாயினான் என்க. |
(இ - ள்.) செங்கண் நீண்முடிச்செல்வ - சிவந்த கண்களையும் நீண்ட முடியையுமுடைய செல்வமிக்க வேந்தே!, ஒரு திங்கள் நாளினுள் - ஒரு திங்கள் எல்லையினமைந்த ஒருநாளில், திவிட்டன் சென்று - திவிட்டன் என்பான் போய், ஆங்கு ஒரு சிங்கம் வாய்பகத் தெறுவன் - அவ்விடத்தின் கண் ஒரு சிங்கத்தை வாயைப்பிளந்து கொல்லுவன்; என்பது - என்னுமொரு வார்த்தை, தங்கு கேள்வியான் தான்முன் சொன்னதே - நிலைத்த கேள்விச் செல்வத்தையுடைய சதவிந்து என்னும் நிமித்திகன் முன்னரே தன் அவதி ஞானத்தாலறிந்து கூறியுள்ளதொரு செய்தியாகும், (எ - று.) அவதி ஞானம் - முக்கால நிகழ்ச்சியையும் அறியும் அறிவு. வாய்பக வென்புழி செயவெனெச்சத்தைப் பகுத்து எனத்திரித்துக் கொள்க. தம்முள் ஆராய்ந்து தெளிந்து கூறும் அமைச்சர்கள் அரசே!, ஒரு திங்ள் எல்லையில் திவிட்டன் ஒரு சிங்கம் வாய்பகத் தெறுவன் என்று சதவிந்து முன்னர்க் கூறினனன்றே (அடுத்த செய்யுளில் முடிவு காண்க). |