(இ - ள்.) தாமம் மென்குழலார் தடம் கண் எனும் - மலர் மாலை சூட்டப்பட்ட மெல்லிய அளகத்தையுடைய காரிகையாரின் கண்கள் என்று கூறப்படுகின்ற, தேம் மயங்கிய செங்கழுநீர் அணி - தேன் பொருந்திய குவளை மலரின்கண் விளங்கும் அழகிய, காமம் என்பதோர் கள்ளது உண்டு-காமம் என்று கூறப்படும் கள்ளைப்பருகி, யாமமும் பகலும் மயர்வெய்தினான் - இரவும் பகலும் மயங்கிக்கிடந்தான், (எ - று.) கள்ளது - என்புழி, அது பகுதிப் பொருளது. அரோ : அசை. கண் களவு கொள்ளும் சிறு நோக்க முதலியனவே காம வின்பத்திற் பெருஞ் சிறப்புடையன ஆகலின் கண் எனும் செங்கழுநீர் அணி காமம் என்றனர். கழிபெருங் காமமாகலின் யாமமும் பகலும் மயர் வெய்தினான் என்றார். மயர் வெய்துதல் - அதன்கண் மயங்கி அழுந்துதல் என்க. |
(இ - ள்.) மன்னவன் ஆயினான் - அரசன் ஆகிய அச்சுவகண்டன், வார்சுற்று முலையார்தம் - கச்சணிந்த முலையினையுடைய மகளிர்களின், துகில் தடம் உற்று - துகிலால் மறைக்கப்பட்ட அல்குலாகிய குளத்தில் படிந்து, மூழ்கும்பொழுதும் - முழுகும் செவ்வியும், அவர் முனிவு உற்றபோழ்து உணர்த்தும் பொழுதும் - அம்மடவார் ஊடும்பொழுது அவரை ஊடல் தீர்த்தற்குரிய செவ்வியும், அலான் - அல்லாமல், மற்றொர் போழ்திலன் - இவற்றின் வேறாயவற்றைச் செய்யத்தகுந்த செவ்வியைப் பெற்றானில்லை, (எ - று.) மன்னவன் ஆயினான் என்றது இகழ்ச்சிக்குறிப்பு - அரசராவார் ஒருநாளில் உள்ள நாழிகைகளை அன்ன நாழிகையில் இன்ன செய்தல் வேண்டும் என வகுத்துக்கொண்டு தம் கடமைகளை அவ்வக் காலங்களில் தவறாதபடி செய்தல்வேண்டும் என்பது அரசியலறம் ஆகவும், அந்த அச்சுவகண்டன் தன் காலத்தை யெல்லாம் படியவும் ஊடலுணர்த்தவுமே கழிக்கின்றான் கண்டீரே என்பார், ‘மன்னவன் ஆயினான்’ என ஆக்கச்சொற் பெய்து எடுத்தோதினார். |