(இ - ள்.) மண்கனிந்த முழவின் - மார்ச்சனையமைந்த மத்தள இசையுடனே நிகழும், மடந்தையர் கண்கனிந்திடும் நாடகக் காட்சியும் - ஆடன்மகளிர் கண்களில் மெய்ப்பாடாக வெளிப்பட்டுத் தோன்றும் கூத்தாகிய காட்சியின்பத்தையும், பண்கனிந்த இன்தீங்குரல் பாடலும் - பாடன் மகளிருடைய பண்முற்றுப் பெற்ற இனிய மிடற்றுப்பாடலின்பத்தையும், விண்கனிந்திடவே விழைவெய்தினான் - தேவர்களும் உளம் நெகிழும்படி விரும்பி நுகர்வானாயினன், (எ - று.) காண்போர் கண்ணைக் கனிவிக்கும் நாடகமுமாம். விண் - தேவர்: ஆகுபெயர். இவ்வின்பங்கள் தேவர்களையும் உருக்குதலால், விண்கனிந்திட என்றார். இதன்கண் மகளிரின்பாற்பெறும் காட்சி இன்பமும் செவியின்பமும் கூறப்பட்டன. |
(இ - ள்.) வாவியும் - (அச்சுவகண்டன் அம்மகளிர் குழாத்துடனே) தடாகங்களினும், மண்டபம் மதுச்சோலையும் - ஊடே மண்டபங்கள் அமைந்த தேன்துளிக்கும் பூம்பொழிலிடங்களினும், தூவிமஞ்ஞை துதைந்த செய்குன்றமும் - தோகையான் அழகெய்திய மயில்கள் நெருங்கிய செய்குன்றங்களினும், பாவும் வெண்மணலும் - பரப்பப்பட்ட வெளிய மணலிடங்களினும், புனல்பட்டமும் - நீர்மிக்க ஓடைமருங்குகளினும், மேவும் நீர்மையனாய் - எய்தும் தன்மையுடையவனாய், விளையாடினான் - விளையாட்டயர்ந்தான், (எ - று.) அச்சுவகண்டன் வாவிகளினும் சோலைகளினும் செய்குன்றங்களினும் மணற் பரப்புகளினும் புனற்பட்டங்களினும் அம்மகளிருடனே மேவிக் காமக் களியாட்டயர்ந்தான என்க. இங்குக் கூறப்பட்ட இடங்கள் காமவின்பத்திற்குச் சிறந்த இடங்களாம். |