பக்கம் : 433
 

     (இ - ள்.) மின்னும் செங்கதிர் மண்டிலம் வெய்து - ஒளியால் மின்னுகின்ற
செஞ்ஞாயிற்று மண்டிலம் வெப்பமுடைத்து, ஒளிதுன்னும் திங்கள் பனிச்சுடர் தண்ணிது -
ஒளியுடைய திங்கள்மண்டிலத்தினது குளிர்ந்த நிலாக்கற்றை தட்பமுடைத்து, என்னும்
இத்துணையும் அறியான் - என்று சொல்லும் இவ்வளவுதானும் அறியப்பெறானாய், களித்து
- கட்காமங்களிற் களிப்புற்று, அச்சுவகண்டன் அன்னன் ஆயினான் - அச்சுவகண்டன்
என்னும் அம்மன்னன் அத்தகையதொரு தன்மையனானான், (எ - று.)

     கதிர்மண்டிலம் வெய்து திங்கண்மண்டிலம் தண்ணிது என்று அறிதல் மிக எளிது.
அதுதானும் அறிய கில்லான் என்புழி அவன் தான் காதலித்த கட்காமங்களையல்லால்
உலகில் வேறொன்றனையும் ஒரு சிறிதும் காண்பானல்லன் ஆயினான் என்றபடி.
 

( 47 )

அச்சுவகண்டனின் அரசியல்

620.

சீறிற் றேர்த்துணர் வின்றிச் செகுத்திடு
மாறுண் டென்பதொர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்ற தவற்கர சென்பவே.
 

      (இ - ள்.) மாறு உண்டு என்பதொர் மாற்றம் பொறான் - (அமைச்சர்கள் அரிதிற்
செவ்விபெற்று) அரசே நமக்குப் பகைவர்கள் உளர் என்று சொல்லும் பொழுது
அச்சொல்லைக் கேட்கவும் பொறுக்கமாட்டான், சீறில் - அப்பகைவரைச் சினக்குமிடத்து,
தேர்ந்து உணர்வின்றி - (வினையிடத்துச் செல்லும் அரசர்கள் செய்தற்பாலனவாகிய)
தேர்தலும் தேர்ந்து தெளிதலும் செய்யாதவனாய், செகுத்திடும் - பகையென்று கூறிய
துணையானே அவரைக் கொல்ல முற்படுவான், மனம் தேறின் - அவன் ஒருவனைத்
தெளியலுறின், யாரையும் - (நட்டார் பகைவர் நொதுமல் என்னும் முத்திறத்தாருள்)
யாவரேயாயினும், தேறும் - (இன்னர் இவர் எமக்கு யாமின்னம் இவர்க்கென ஆராயாமலே)
தெளிந்துகொள்வான், செருக்கொடு - பொச்சாப்போடு, அவற்கு அரசு இவ்வாறு சென்றது -
அவ்வச்சுவகண்டனுக்கு அரசியலறம் இங்ஙனமாக நடைபெற்றது, (எ - று.)

     அரசு என்றது, இகழ்ச்சிக்குறிப்பு; என்னை? அரசர்க்கு ஆகா எனச் சான்றோரால்
விலக்கப்பட்ட தீக்குணங்கள் உண்மை செப்பி, “அவற்கு“ என விதந்தோதி அரசு
சென்றதென்றலின் என்க. இவை அரசற்காகாதன என்பதைத் திருக்குறள் முதலிய மெய்ந்நூல்களானறிக.

( 48 )