(இ - ள்.) என்றலும் - என்று சதவிந்து கூறக்கேட்டலும், இணர்வேய் முடிமாலையான் - கொத்தாய் அலர்ந்த மலராலாய முடிமாலையை அணிந்துள்ள அச்சுவகண்டன், நன்று சொல்லுக என்று - நல்லது நிமித்திகனே நீ கூறக்கருதிய அவ்வுறுதிப் பொருளைச் சொல்வாயாக என்று கூறி, நகைமணிக் குன்றம் அன்ன - விளங்குகின்ற மாணிக்க மலையை ஒத்த, தோள்மிசைக் குண்டலம் சென்று மின் சொரிய - தன் தோளின் மேல் காதணியாகிய குண்டலம் சென்று ஒளிர்தலைச் செய்ய, செவி தாழ்த்தினான் - செவியை ஒருபுறமாகச் சிறிது தாழ்த்துவானாயினான், (எ - று.) அங்ஙனம் தாழ்த்தியது நிமித்திகனை இகழ்ந்தவாறென்க. அவ்வாறாயின் நிமித்திகனே கூறுக, யான் அதனைக் கேட்குவல் எனச் செவி தாழ்த்தினான் என்க. |