பக்கம் : 440
 

     (இ - ள்.) பூமிமேற் புரிசை மதில் போதனம் நாம நன்னகர் - நிலத்தின்மேல்
புரிசையென்னும் உறுப்பினையுடைய மதில்களாற் சூழப்பட்ட போதனம் என்னும்,
பெயரையுடைய நலம் சிறந்த நகரம் ஒன்று உளதன்றே, ஆளும் நகைமலர்த்தாமம்
நீள்முடியான்றன் - அந் நகரின்கண் வீற்றிருந்த ஆட்சி செய்யும் விளக்கமுள்ள
மலர்மாலையை அணிந்துள்ள நீண்ட முடிமன்னனாவான் பயாபதியின், புதல்வர்கள்
காமவேள் அனையார் உளர் காண்டி ஆல் - மகார்களாவார் உருவநலத்தால்
மன்மதனையே ஒப்பர், விசயன் திவிட்டன் என்பார் இருவர் உளராதலை நீ அறிவாயன்றே,
(எ - று.)
உத்தரசேடி மலைமேலதாகலின் போதனத்தைப் பூமிமேலது என்றான், ஆல் : அசை.
பயாபதி மன்னனையும் அவன் மக்களையும் அச்சுவகண்டன் பண்டே அறிந்துளன் என்பது
தோன்றக் காண்டியால் என்றான் என்க.
 

( 59 )

இதுவுமது

632.

ஏந்து தோளவ ருள்ளிளை 2யானமக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ.
 

     (இ - ள்.) ஏந்து தோளவருள் - உயர்ந்த தோளுடைய அவ்விருவருள் வைத்து,
இளையான் நமக்கு ஆய்ந்த தொல்பகையாகும் என்றே - இளையவனாகிய திவிட்டன்
என்பான் ஆராய்ந்தறிந்ததொரு பழம் பகைவன் ஆவான் என்று, உறப்போந்து ஓர்
புன்சொல் நிமித்தம் புறப்பட - பொருந்துமாறு வந்து ஒரு புல்லிய சொல்லாகிய நிமித்தம்
வெளிப்பட்டதாக, வேந்தயான் மனத்தின் மெலிகேன் - அரசே அஃதறிந்த பின்னர் யான்
என் மனத்துள்ளே மிகவும் வருந்தி மெலியா நின்றேன், (எ - று.)

திவிட்டன் தொல்பகைவன் என நிமித்தம் புறப்பட்டது தீமையாதலின் புன்சொல் நிமித்தம்
என்றான்.
யான் மனத்தின் மெலிகேன் என்றமையால், அவனால் உனக்கு அழிவு நேரும் என்பதைக்
குறிப்பாற் கூறினன்.
 

( 60 )

அச்சுவகண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
633.

முத்த நீண்முடி யான்முன்ன மற்றதற்
கொத்த 2வாறுணர்ந் தீயென வென்செயு
மைத்த கைமனத் தன்மனித் தான்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன். 

     

 

     (பாடம்) 1. யான் மகன். கின்றதோ. 2. வாறறிந் தீகென, வாறறிந்தீ யென.