பக்கம் : 444 | | (இ - ள்.) புலந்தெழு நீர்மையாய் - பிணங்கி எழுந்து பேசும் தன்மையுடைய நிமித்திகனே!, மற்றவர் தம்மை - நீ சொல்லிய அத்திவிட்டன் முதலிய பகைவர்மேல், விச்சை விடுப்பதோர் இச்சை - மாயவித்தையை ஏவுதல் வேண்டும் என்னும் ஒரு விருப்பம், என்கண் உண்டாம் எனின் - என் உளத்தில் தோன்றிவிடுமாயின், அச்சமின்றி யாவரே நிற்பார் - அம் மாயப்படைமுன் அஞ்சி ஓடுவாரல்லாது துணிந்து நிற்பார் யாரேதான்!, அந்நிமித்தநூல் பொச்சல் ஆம்கொல் - உன்னால் போற்றப்பட்ட அந்த நிமித்தநூல் பொய்ப்படுமொரு குற்றமுடைத்துப்போலும், (எ - று.) மானிடரைப் பொருளாக மதித்து என் மாயவிச்சையைவிட என்மனம் நினைத்தலரிதென்பான், “இச்சை என்கண் உண்டாமெனின்“ என்றான். அவ் விச்சை என்பாலுளதாக எனக்கு அவர் பகை யாவர் என உன் நிமித்தநூல் கூறிற்று எனின் அது பொருந்தாப் பொய்ந்நூல் என்றற்கு இதுவே சான்றாகும் என்றான் என்க. | ( 67 ) | இதுவுமது | 640. | புலவர் சொல்வழி 1போற்றில னென்பதோ ரலகில் புன்சொலுக் கஞ்சுவ னல்லதே லுலக மொப்ப வுடன்றெழு மாயினு மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே. | (இ - ள்.) புலவர்சொல் வழிபோற்றிலன் என்பதோர் அலகில் புன்சொலுக்கு அஞ்சுவன் - அறிவுடையோர் கூறிய நெறியின்கண் அச்சுவ கண்டன் நின்றானில்லை, என்னுமொரு முடிவில்லாத பழிச்சொல் உண்டாமே என்று யான் சிறிது அஞ்சாநிற்பேன், அல்லதேல் - இல்லையாயின், உலகம் ஒப்ப உடன்று எழுமாயினும் மலைவன் - (இத்திவிட்டன் முதலியோர் கிடக்க) இப்பேருலகத்தே வாழ்வார் எல்லாம் என்பாற் பகை கொண்டு என்னை எதிர்த்தெழுந்து வருதலுண்டாயபோதும், அஞ்சேன் - அவரையெல்லாம் எதிர்த்துப் போர்செய்து கொல்லலும் கொல்வேன், மற்றதன்கண் மதிப்பில்லை - இங்ஙனமாதலின் பகையின்பால் எனக்கு ஆராய்ச்சியில்லை, (எ - று.) அச்சுவகண்டன் புலவர் சொல் போற்றாப் புல்லியன் என்று உலகம் கூறுமென்றஞ்சியே எனக்குப் பகையுளதென்னும் உன்சொல்லைப் பொறுமையுடன் இதுகாறும் கேட்டேனல்லது உலகம் முழுதும் ஒரு கணத்தே வெல்லும் ஆற்றலுடைய யான் எனக்குப் பகையுளதாம்என்று எண்ணுதலும் மதித்தலும் இல்லை என்றான் என்க. (68) (பாடம்) 1. நில்லலன். | ( 48 ) | | |
|
|