பக்கம் : 445
 

இதுவுமது

641.

ஆத லாலதற் கேற்ற தமைச்சர்க
ளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்
யாதுந் தன்கணல் 1லார்செயற் 2கேன்றதோ
ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன்.
 

     (இ - ள்.) ஆதலால் அதற்கேற்றது அமைச்சர்கள் ஓதியாங்கு உணர்ந்தீக என்று
ஒட்டினான் - இருந்தவாற்றால் சதவிந்துவே! எனது தன்மைக்குத்தக ஆராய்ந்து அறிவுடை
அமைச்சர்கள் உரைத்தபடி நீ உணர்ந்துகொள்ளக் கடவாய் என்று தடுத்துரைத்தான் (அவன்
யாரெனில்), தன்கண் அல்லார் பெயற்கு ஏன்ற ஓர் ஏதம் யாதும் உண்டு எனும் -
தன்னிடத்தே பகைவராவார் செய்வதற்கியன்ற தீது ஏதாயினும் உளதாதல் கூடும் என்று
எண்ணுகின்ற, எண்ணம் இல்லாதவன் - எண்ணம் ஒரு சிறிதும் இல்லாதவனாகிய
செருக்குடைய அச்சுவகண்டன் என்பதாம், (எ - று.)

     எனவே நீ உன் அறியாமையை நல்லமைச்சர்பால் பயின்று போக்கிக்
கொள்ளற்பாலையன்றி உன் நிமித்தம் மெய்யாம் எனக் கருதி அதற்கேற்ப நடத்தற்குரியன்
அல்லன் யான் எனப் பெரிதும் நிமித்திகனை இகழ்ந்தான் என்க.
மூடர்கட்கு அறிவு கொளுத்த முயலும் அறிஞர்க்கு நிகழும் இழிவுக்கு இந்நிகழ்ச்சி நல்ல
எடுத்துக் காட்டாதலறிக.
 

( 69 )

அச்சுவகண்டன் அமைச்சர் கூறுதல்
642.

அலங்க லாழியி னானது கூறலுங்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடாம்
புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன
ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்.
 
 

     (இ - ள்.) அலங்கல் ஆழியினான் - மலர்மாலை வேய்ந்த சக்கரப் படையை ஏந்தும்
அச்சுவகண்டன், அதுகூறலும் - அங்ஙனம் சொன்னவுடனே, உலங்கொள் தோளவனுக்கு -
கற்போன்ற வலிய தோள்களையுடைய அச்சுவகண்டன் உணர்ச்சிக்கு, உணர்வாயினார் -
பொருந்திய உணர்ச்சியே உடையவர்களும், கலங்குநூல் கருமத்தொழின் மாக்கள்தாம் -
தெளிவின்றிக் கலங்கிக் கிடக்கும் பொய்ந்நூல்களை ஓதி அவைகாட்டும் நெறியில் நின்று
காரியம்செய்ய முற்படுபவரும் பகுத்தறி வற்ற வரும் ஆகிய அமைச்சர்கள், புலங்கொள்
சூழ்ச்சியராகி - தத்தம் புல்லறிவிற்குப் பொருந்திய ஆராய்ச்சியுடையராய், புகன்றனர் -
அரசனை நோக்கிக்கூறத் தொடங்கினார், (எ - று.)

 

     (பாடம்) 1. லார் செய. 2. ரின்றதோர்.