பக்கம் : 448
 

     (இ - ள்.) அஞ்சி நின்று அவர் கூறியபின் - (எம்முரை அச்சுவ கண்டனுக்கு
உவப்பை நல்குமோ அன்றிச் சினத்தையேத் தூண்டுமோ என்னும்) அச்சத்தால்
நடுங்கிநின்று அவ்வமைச்சர் இங்ஙனம் கூறிமுடித்த பின்னர் அரிமஞ்சு என்பவன்
சொல்லும் - அரிமஞ்சு என்னும் பெயருடைய அமைச்சன் கூறுவான், மற்று ஆங்கு அவன்
- நிமித்திகனாற் கூறப்பட்ட போதனத்தின்கண்ணுள்ள அத்திவிட்டன் என்பான்,
தேர்ந்துகண்டு செஞ்செவே பகை ஆமெனில் - யாம் ஆராய்ந்து காணுங்கால் நம்
தகுதிக்கேற்ற நேரிய பகைவனே ஆவன் என நமக்குத் தோன்றுமாயின், எஞ்சில்
தொல்புகழாய் - குறையாத பழைய புகழையுடைய வேந்தே!, பின்னை எண்ணுவாம் -
அதன் பின்னரே அப்பகையைப்பற்றி ஆராய வேண்டியவற்றை ஆராய்வாம், (எ - று.)

     திவிட்டன் நமக்குப் பகைவன் ஆவான் என்று நிமித்திகன் கூறிய துணையானே யாம்
அவனைப் பகைவனென்று முடிவு செய்தல் தகுதியன்று, அத்திவிட்டன் நமக்குப்
பகைவனாதலை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே, பகையாயவழி அவனைக் களைய
முற்படல் வேண்டும் என்று அரசனுக்கு அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறினான்.
 

( 74 )

இதுவுமது

647.

பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
நகையி றீமனத் தாரைநண் பெண்ணலு
முகையின் 1வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்
மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே.
 

      (இ - ள்.) முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய் -
பருவமொட்டுக்களாற் புனைந்த மெல்லிதாய செறிவுடைய மலராலாய முடிமாலையை உடைய
அரசே!, பகையலாதவரைப் பகை ஆக்கலும் - பகைத்தற்குரிய இகல் முதலிய குணங்கள்
இல்லாதவரைப் பகைவராக்கிக் கொள்ளுதலும், நகையில் தீமனத்தாரை நண்பு எண்ணலும் -
மகிழ்தலில்லாத தீங்கெண்ணும் மனமுடையவர்களை நட்டற்கு எண்ணுதலும், மிகையின் -
மிகையான செயல்கள் ஆதலான், மற்றவை பின்னை வெதுப்பும் - அச் செயல்கள்
விளைவின்கண் துன்புறுத்துவனவாம், (எ - று.)

     நம்பால் பகைக்குணமில்லாத ஏதிலாரை அறியாமையால் பகையென்று கருதி அவரைக்
கெடுக்க முயன்றால் அவர்கள் உண்மையான பகைவர்களே ஆகிவிடுவர். அவ்வாறே
நண்பரல்லாதவரை நண்பர் என்று கருதி ஒழுகுதலும் கேடுதரும் ஆகலின், பகைவரா
நண்பரா என்று ஆராய்ந்து தெளிவதே முதற்கடன் ஆகும் என்று அரிமஞ்சு கூறினன்
என்க.

( 75 )


     (பாடம்) 1. வேய்ந்த மொய்ம்பூமலர்க்.