அப்போதனமா நகரம்; இந்திர உலகம் வந்து - விண்ணுலகமானது நிலவுலகத்திற்கு வந்து; இழிந்தது ஒக்கும் - இறங்கியிருப்பதைப் போன்றதாகும். (எ - று.) விண்ணுலகில் உள்ளார் இராப்பகல் என்னும் வேறுபா டுணராது இன்பத்துய்ப்பில் திளைத்திருப்பர். இப்போதன மாநகரத்து மங்கையரும் மைந்தரும் விண்ணுலகத்தாரைப்போல் இராப்பகல் உணராது இன்பத்தில் திளைத்து நின்றனராதலின், ‘இந்திர உலகம் வந்து இழிந்தது ஒக்கும்’ என்றார். செல்வப் பெருக்காலும் இன்பப் பெருக்காலும் ஒப்புக் கூறினார். அந்தரப்படுத்தல் - இடையறிதல். படுத்தவர் முற்றெச்சம். இன்பத்தில் அழுந்தியிருப்போர் இரவு பகல் உணரார் என்பதனை, “போகப் பெருநுகம் பூட்டிய காலை மாக விசும்பின் மதியமு ஞாயிறும் எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு“ எனவரும் பெருங் கதையானும் உணர்க ( 2 - 9 : 183 - 85 ) |
( 15 ) |
பயாபதி மன்னன் மாண்பு |
51. | மற்றமா நகருடை மன்னன் 1றன்னுயர் ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப் பெற்றியான் 2பயாபதி யென்னும் பேருடை வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே. |
(இ - ள்.) அ மாநகர் உடை மன்னன் - அத்தகைய சிறப்புடைய போதன நகரத்தையுடைய மன்னன் எத்தகையன் எனின்? பயாபதி என்னும் பேர் உடை - அவன் பயாபதி என்று சொல்லப்பெறுகிற பேரையுடையவனும்; வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தன் - வெற்றியைக் கொடுக்கின்ற வேலாயுதத்தையும் மணிகள் இழைத்த முடியையும் உடைய அரசர்க்கரசனும்; தன்உயர் ஒற்றைவெள் குடை நிழல் - தன்னுடைய உயர்ந்த ஒப்பற்ற வெண்கொற்றக் குடைநிழலிலே வாழ்கின்ற; உலகிற்கு ஓர் உயிர்ப்பெற்றியான் - உலகமாகிய உடலுக்குத் தான் ஓர் உயிராக விளங்குகின்ற பெருமையை உடையவனும் ஆவான். (எ - று.) பயாபதி மன்னன், தனது நாட்டு மக்களின் உயிரைப்போற் சிறந்து விளங்குகின்றான் என்க. மற்று-அசை. அமாநகர்-தொகுத்தல். |
|
(பாடம்) 1. தன்னமர், 2. பிரசாபதி |