பக்கம் : 450
 

     அரிமஞ்சு கூறிய சூழ்ச்சியை அச்சுவகண்டன் பெரிதும் புழ்ந்து உடனே அவன்
கூறியபடியே திறை பெறும் பொருட்டுத் தூதுவர்களைப் போதன நகரத்திற்குச்
செலுத்தினான் என்க.
வென்றி வேலவன் என்றது பயாபதி மன்னனை. அவன் திறை கொடாமையைக் குறிப்பாற்
கூறுவார் வென்றி வேலவன் என்றார்.
 

( 77 )

அத்தூதர்களின் பண்பு

650.

ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த
ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
நாட்டி யம்முணர் வாரொரு 1நால்வர்சேண்
மோட்டே ழின்முகில் சூழ்நெறி முன்னினார்.
 

     (இ - ள்.) ஊட்டரக்குண்ட கோலர் - அரக்கு ஊட்டப்பட்ட கோல்களையுடையாரும்,
ஒண்கோலத்தார் - ஒளி மிக்க அலங்காரத்தினை உடையாரும், ஓட்டு அரும்பொறி ஒற்றிய
ஓலையர் - மண்ணோட்டினுட் பொதிந்த அரிய இலச்சினை பொறிக்கப்பட்ட
திருவோலையை உடையாரும், நாட்டியம் உணர்வார் - கூத்தியர் வல்லுநரும் ஆகிய, ஒரு
நால்வர் - ஒரு நான்கு தூதர்கள், மோட்டெழில் முகில்சூழ் நெறி முன்னினார் - உயரிய
வனப்புடைய முகில்கள் பரவிய விசும்பு வழியாக விரைந்தார்கள், (எ - று.)

     தூதர்கள் பிறர் கண்கவர் தோற்றமுடையராய் இருக்கவேண்டும் என்ப. நாட்டியம்,
அவிநயங்காட்டி ஆடும் கூத்து. எண்வகை மெய்ப்பாடுகளையும் வேண்டியபொழுது காட்டிப்
பேசுதல் இன்றி யமையாதாகலின், தூதர்கள் நாட்டிய முணர்தல் வேண்டும் போலும். இனி
விஞ்சையர் கலைவல்லுநர் ஆதலின் நாட்டியம் உணர்வார் என்றனர் எனினுமாம்.
 

( 78 )

வேறு
தூதர் போதன நகரத்தை எய்துதல்

651.

தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை
யோதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே.

      (இ - ள்.) தூதுவர் - அவ்வாறு சென்ற தூதர்கள், தீது அறுதென்மலை மாதிரம்
முன்னுபு - தீமைகளில்லாத தென்மலை நின்ற திசை நோக்கிச் சென்று அதனைக் கடந்து,
ஓதினர் ஓதி உலப்பு அற ஓங்கிய - தன் சிறப்புக்களைப் புகழவல்லார் எத்துணைப்
புகழ்ந்தும் முடிதலில்லாது ஓங்கிய புகழ் உடையதும், சூழ்சுடர் சூடிய குளிகை - சுற்றுப்
புறங்களில் ஒளிக்கற்றை களை அணிந்துள்ள உப்பரிகைகளால் விளங்குவதும் ஆகிய,
போதனமா நகர் அன்றே புக்கனர்- போதனமா நகரத்தில் அந்நாளிலேயே புகுந்தனர்,
(எ - று.)

 

     (பாடம்) 1. நால்வராய்.