பக்கம் : 453
 

அப் போதன நகரத்தில் மகளிர்கள், தம் கணவரைப் புணரும் பொழுது தாமே அறுந்து
வீழ்ந்த அணிகலன்களையும் ஊடுங்கால் தாம் அறுத்துதிர்த்த அணிகளையும், வீதிகளிலே
எறிந்து விடுதலால்; அவை அவ்வழிகளைத் தடைசெய்வன வாயின என்னும் இதனால்
அந்நகரத்தின் செல்வ மிகுதி உணர்த்தப்ட்டது. மூடுதற்றொழிலாலே எல்லாத் தெருக்களும்
தம்முள் ஒப்பனவாயின என்க.
 

( 83 )

 
656.

மூரி நடைக்களி யானை மதத்தினொ
டேரி னடைக்கலி மாதம் விலாழியு
மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
வேரி வெறிக்கள மொப்பது கண்டார்.
 

     (இ - ள்.) மூரிநடை களியானை மதத்தினொடு - பெருமை தங்கிய நடையையும்
களிப்பையும் உடைய யானைகளின் மத நீரோடு, ஏரின் - அழகினையுடைய, நடைக்கலிமா
விலாழியும் - நடையமைந்த குதிரைகளின் வாய் நுரையும், ஓரி - தத்தம்
படுக்கையிடங்களிலே, உகுத்த பெருங்கடை - சிந்தப்பட்ட பெரிய முன்றில்கள், வேரி
வெறிக்களம் - மணமுடைய வெறியாடு களங்களை, ஒப்பது கண்டார் - ஒத்திருத்தலைக்
கண்டு போயினர், (எ - று.)
     மூரி - பெருமை. யானைநடை கண்ணியமானது ஆகலின் மூரிநடை என்றார். ஏரின் -
அழகினையுடைய. கலிமா - குதிரை; தம் : அசை. விலாழி - வாய்நுரை. ஓரி - விலங்கின்
படுக்கை. பெருங்கடை - பெரிய முன்றில். வேரி - மணம்.

     வேன்மகன் முருகனுக்கு வெறியாடும் விழாக்களத்தே தெய்வமுற்று ஆடுவோர்
பூமாலைகளை யாண்டும் வீசுதலால் அக் களமெங்கும் அம்மாலைத் துணுக்குகள் கிடப்பன
போன்று. குதிரை விலாழியும் யானைமதமுத் சிந்திக்கிடக்கும் முன்றில்கள் தோன்றுகின்றன
என்க.
 

( 84 )

தூதர்கள் அரண்மனையை அடைதல்

657.

வண்டு படக்குவ ளைப்பிணை 1நக்கலர்
2விண்ட மதுப்பரு 3கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
4மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்.

 

 

     (பாடம்) 1. வாயலர். 2. விண்டு மரைப்பதிமேலன மாமதர். 3. சுரவிரைப்பதொர்.    4. புரிசைக்கரை வந்தார்.