(இ - ள்.) வண்டுபட - வண்டினம் மொய்த்தலாலே, குவளை - குவளை அரும்பு, பிணைநக்கு அலர் - பிணிப்பு நெகிழ்ந்து அலர்தலானே, விண்ட - துளித்த, மது - தேனை, பருகி - உண்டு, களியின் மதர்கொண்ட நடை - அத்தேன் வெறியாலே செருக்குற்ற நடையினை உடையவாகிய, களியன்னம் - மகிழ்ச்சியுடைய அன்னப்பறவைகள், இரைப்பதுஓர் - ஆரவாரித்தற்கிடமான ஒப்பற்ற, மண்டுபுனல் - பெருகுகின்ற நீரையுடைய, அகழியையுடைய, புரிசைப்பதி - மதில்சூழ்ந்த அரண்மனையை, சார்ந்தார் - எய்தினார், (எ - று.) பிணை - பிணிப்பு. இதழ்களின் பிணிப்பென்க. நகுதல் - ஈண்டு நெகிழ்தன் மேனின்றது. அலர்தலான் விண்ட என்க. மதர் - செருக்கு. புனல் - ஈண்டு அகழி அத்தூதுவர் - அன்னம் ஆரவாரிக்கும் அகழி சூழ்ந்த மதிலையுடைய அரண்மனையை எய்தினர் என்க. |
(இ - ள்.) கோயின் முகத்தது - அவ் வரண்மனையின் முன்பகுதியிலே பொருந்தியதாகிய, கோடுஉயர் சூளிகை - சிகரங்கள் உயர்ந்துள்ள சூளிகை பொருந்தியதும், வேய்இல் முகத்து அதின் - வேயப்பட்டதும் அரண்மனை முகப்பின்கண் உள்ளதுமாகிய அச்சூளிகையின்கண், மாமழை வீழ்வது - பெரிய முகில்கள் தவழப்படுவதும், ஞாயில் முகத்த - ஞாயில் என்னும் உறுப்பை உடையதும், நகைத்திரள்முத்து அணி - விளங்குகின்ற உருட்சியையுடைய முத்தினாலே அழகு செய்யப்பட்டதும் ஆகிய, வாயில் முகத்து மடுத்து - அத்தலைவாயிலின் கண்ணே எய்தி, இது சொன்னார் - இம்மொழிகளை இயம்பினர், ( ) அத்தூதர்கள் வாயிலிடத்தே எய்திப் பின்வருமாறு கூறினர் என்க. ஞாயில் - மறைந்திருந்து அம்பு ஏவுதற் பொருட்டு மதிலகத்தே அமைப்ப தோர் உறுப்பு என்க. வேய் இல் முகத்து அதின் எனக் கண்ணழித்துக் கொள்க. |