(இ - ள்.) நீள்கடை காப்போய் - நீண்ட வாயிலைக் காக்கும் காவலனே!. மன்னன்முன் நீ தலைசென்று - உங்கள் வேந்தனாகிய பயாபதியின்பால் நீ சென்ற, வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் - உச்சியில் மூங்கில்கள் நீண்டுள்ள வெள்ளிமலையின் அரசனான, ஓய்தலில் ஒண்சுடர் ஆழியினான் தமர் - ஒழிவில்லாது ஒளிகாலும் ஆழிப்படையை யுடைய அச்சுவகண்டனைச் சார்ந்த தூதர்கள், வந்து வாய்தலில் நின்றனர் என - வந்து நம் அரண்மனை வாயிலில் நின்றுளர் என்று, உரை - அறிவிப் பாயாக( ) அரண்மனை வாயிலை அடைந்த அத்தூர்கள் வாயில்காவலனை நோக்கிக் கூறுகின்றவர் “ஆழியினான் தமர் நம் வாயிலில் வந்து நின்றார் என்று உன்னரசற்கு உரை“ என்றார் என்க. தூதருடைய கூற்றில் அதிகார ஆணவம் தோன்றுதல் காண்க. |
(இ - ள்.) என்றவர்கூற - என்று அத்தூதர்கள் கூறியவுடனே, இருங்கடை காவலன் - பெரிய அரண்மனை வாயில்காப்போன், நன்றென - நல்லது அங்ஙனமே செய்வேன் என்று, நாறு ஒளி நீண்முடியான் அடி - தோன்றாநின்ற சுடரையுடைய நீண்ட முடியையுடைய பயாபதி மன்னன் அடியில் சென்று, மன்ற வணங்கி - மிகத்தொழுது நின்று, மொழிந்தனன் - அத்தூதர்கள் வரவையுரைத்தான், மன்னனும் - அப்பயாபதி மன்னனும், ஒன்றிய போதக என்பது உரைத்தான் - அவர் என் முன்னிலையிற் பொருந்தப் புகுவாராக என்று உரைத்தான், (எ - று.) போதக : வியங்கோள். என்று அத்தூதர் கூறியவுடன், அவ்வாயிலோன் நன்றென நீண்முடியான் அடி மன்ற வணங்கி, அவர் கூறிய கூற, மன்னனும் அவர் இங்குப் போதக என்றனன், என்க. |