பக்கம் : 456
 
 

மன்னவன் வார்கழல் வாழ்த்தி மடக்கிய
சொன்னவி 1லோலைகை தொழுதன 2ரீந்தார்.
 

     (இ - ள்.) பொன்னவிர் நீள்கடைகாவலன் போதக என்னலின் - பொன்னொளி
சுடரும் நீண்ட வாயிலைக் காக்கும் அவ்வாயிலோன் மீண்டுவந்து, தூதர்களை நோக்கி
நீயிர் புகுதுக என்று கூறியவுடன், எய்தி - அத்தூதுவர்கள் அரசன்பாற் சென்று,
இலங்கொளி நீண்முடி மன்னவன் வார்கழல் வாழ்த்தி - விளங்குகின்ற ஒளியையுடைய
நீண்ட முடிமன்னனாகிய பயாபதியின் நெடிய கழல்கட்டிய அடிகளை வாழ்த்தி வணங்கி,
கைதொழுதனர் மடக்கிய சொல் நவில் ஓலை ஈந்தார் - கைகூப்பித் தொழுது சுருளிடப்
பட்ட தூதோலையை அரசன் கையிற் கொடுத்தார், (எ - று.)

     வாயிலோன் அரசன் உடன்பாட்டை உரைத்தலும் தூதர் அரசன்பால் எய்தி அவன்
கழல் வாழ்த்தி ஓலையைத் தொழுது ஈந்தார் என்க.
 

( 89 )

அந்த ஓலையைப் படித்தல்

662.

வாசகன் மற்றது 3வாசினை செய்தபின்
மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய 4வாழியன் சீர்த்தம
ரோசைக ளோலை 5கொ டொப்ப வுரைத்தார்.
 

     (இ - ள்.) வாசகன் மற்றது வாசினை செய்தபின் - ஏடு படிப்போன் அவ்வோலையை
அரசன் கேட்ப வாசித்த பின்னர், மாசகல் நீள்முடி மன்னவன் முன்னிவை - குற்றந்தீர்ந்த
நீண்ட முடியையுடைய பயாபதி வேந்தன் முன்னர்ப் பின்வருவனவற்றை, தேசு அகம் மூசிய
ஆழியன் சீர்த்தமர் - அகத்தின் கண்ணே ஒளிக்கற்றைகள் மொய்த்த சக்கரப்
படையையுடைய அச்சுவகண்டனுடைய சிறந்த தூதர்கள், ஓசைகள் ஓலைகொடு ஒப்ப
உரைத்தார் - அத்திருவோலையைக் கருத்திற்கொண்டு தம் வாயினாலும் செய்திகள் சில
உரைப்பாராயினர், (எ - று.)

     வாசினை - படித்தல். அவ்வோலை வாசகத்தை ஏடு படிப்போன் அரசனுக்குப்
படித்துணர்த்திய பின்னர். அத்தூதர்கள் பின்வருமாறு கூறினர் என்க. ஓசைகள் -
மொழிகள். ஓலைகொடு - ஓலைவாசகத்தைக் கருத்திற் கொண்டு அதற்கு ஆக்கமான சில
செய்திகளைச் சொன்னார் என்க.
 

( 90 )


     (பாடம்) 1. ஓலையும். 2. ஆய்ந்தார். 3. வாசனை. 4. வாழியனான் தமர், வாழியினான்தமர். 5. கொண்.