பக்கம் : 458
 

     (இ - ள்.) வெண்கதிர் முத்து அகில்வேழ மருப்பு ஒடு - வெள்ளிய
ஒளியையுடைய முத்தும் அகிலும் யானைக்கொம்பும் ஆகிய இவற்றோடு, கண்கவர் சாமரை
வெண்மயிரின் கணம் - கண்ணைக் கவர்கின்ற சாமரை செய்தற்கு வேண்டிய
வெண்மையான கவரிமாவின் மயிர்க்கற்றையும், தண்கதிர் - வெண்குடையாய்! - குளிர்ந்த
திங்கட்குடையையுடைய வேந்தே!, நீ தரல் வேண்டும் - நீ எம்மரசற்குத் திறையாகக்
கொடுத்தல் வேண்டும், இது ஒண்சுடர் ஆழியினான் உரை என்றார் - இஃது ஒள்ளிய சுடர்
அமைந்த சக்கரமேந்தும் அச்சுவகண்டனுடைய கட்டளையாகும், என்று கூறினார், (எ - று.)

     ஈண்டுக் கூறப்பட்ட முத்து வேழமருப்பின் அணித்தாய்க் கூறலின் அம்மருப்பில்
விளைமுத் தென்னலாம். முத்தும் அகிலும் வேழ மருப்பும் சாமரை வெண்மயிரின் கணமும்
ஆகிய இவற்றைத் திறையாகத் தரல் வேண்டும், இஃது எம்மரசன் கட்டளையாம் என்றார்
என்க.
 

( 93 )

வேறு
பயாபதியின் மனநிலை

666.

வேந்தன்மற் றதனைக் கேட்டே 1வேற்றுவ னெறிந்த கல்லைக்
2காந்திய கந்த 3தாகக் கவுட்கொண்ட களிறு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்.
 

      (இ - ள்.) வேந்தன் மற்றதனைக் கேட்டே - பயாபதி மன்னன் அத்தூதுவர்கள்
உரைத்தவற்றைக் கேட்டு, வேற்றுவன் எறிந்த கல்லை - பகைவன் எறிந்த கல்லை,
கந்ததாகக் கவுள் கொண்ட காந்திய களிறுபோல - தான் அதுபோழ்து தறியில்
யாக்கப்பட்டிருத்தலால் அப்பகைவனை மாறு செய்யமாட்டாது அக்கல்லைச் செவ்வி
வருந்துணையும் தன்கவுளில் அடக்கிக் கொண்ட சினமிக்க யானையைப்போன்று, சேந்தவர்
உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கிவைத்து - தன்பாற் பகைமையுடைய அச்சுவ
கண்டனுடைய தூதர் உரைத்தமொழிகளைத் தனது மனத்தினுள் அடக்கிக் கொண்டு,
நாந்தகக்கிழவர் கோமான் - வாள்மறவரின் தலைவனான பயாபதி வேந்தன்,
நயந்தெரிமனத்தனானான் - காலங்கருதி இருத்தல் என்னும் அரசர்க்கோதிய நன்மையை
உணர்ந்து கொண்ட மனத்தை உடையவ னானான், (எ - று.)

 

     (பாடம்) 1. வேற்றவன். 2. காய்ந்திய. 3. தாகி (கவிட்) (சேய்ந்த)?