பக்கம் : 460
 
 

பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்க மாட்டா 1மெலிபவால் வெளிய நீரார்.
 

     (இ - ள்.) மதியினை மலரச்சூழ்ந்து - அறிவை விரிவுறவைத்து ஆராய்ந்து,
வருந்தித்தாம் படைக்கப்பட்ட - மனம்மொழி மெய்களால் தாமே வருந்தி ஈட்டப்பட்ட,
நிதியினை நுகர்தும் என்று நினைத்து இருந்த போழ்தில் - பொருள்களை இனி
அநுபவிப்போம் என்று எண்ணி இருக்கின்ற பொழுதில், பதியினைக் கலக்கிச்சென்று
பறித்துத் தாம் - அங்ஙனம் எண்ணியிருந்தாருடைய உறையுள் முதலியவற்றையும் நிலை
குலையச் செய்துபோய் அவர் வருந்தியீட்டிய நிதிக்குவியல்களையும் பிடுங்கி, பிறர்க்கு
நீட்டும் விதியினை விலக்கமாட்டா - ஏதிலாராய பிறர்பால் கொடுக்கின்ற தீய போகூழை
அகற்ற இயலாத வராய், வெளிய நிரார் மெலிபவால் - பேதையர் வருந்தா நிற்பர்,
(எ - று.)
     மாட்டா : துவ்வீறு தொக்கது, ஆல் : அசை.
ஒருவன் அறிவாலே ஆராய்ந்து உடல் வருந்தி ஈட்டிய பொருளை இனி நுகர்வாம்
என்றிருக்கும்போது பகைவர் புக்கு அவன் உறையுள் முதலியவற்றைக் குலைத்து அவன்
பொருளை ஏதிலார்க்குக் கொடுக்கும் படி செய்வது போகூழே ஆகும். அப்போகூழை
மாற்றலாற்றாது பேதைகள் வருந்தா நிற்பர் என்பதாம்.
 

( 96 )

அந்த ஓலையைப் படித்தல்

669.

ஒளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ
ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா
மளியமோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்.
 

     (இ - ள்.) ஒளியினால் பெரியன் ஆய ஒருவனுக்கு - புகழுடைமையால் சிறந்த
பெரியோன் ஒருவனை அண்மி அவனுக்கு, உவப்பச்செய்து - மகிழ்ச்சியுண்டாகும்படி
அவன் ஏவியவற்றை நன்குசெய்து, ஓர் அளியினால் வாழ்தும் என்னும் அவாவினுள் -
அவன் நம்பாற்காட்டும் ஓர் அருளாலே யாம் இன்புற்று வாழ்வாம் என்னும் பேராசையினுள்
அழுந்துகின்றாம் - அழுந்தாநின்றோம், நாம் இதனைத் தெளியக்கண்டும் - நாம் இதற்குரிய
காரணத்தை நன்கு தெரிந்துவைத்தும், செய்வினைத் திறங்கள் தன்மைகளை
ஆராய்கின்றோமில்லை, அறிவினாற் சாலப்பெரியமேகாண் - நாம் அறிவுடைமையால்
மிகமிகப் பெரியமே போலும், அளியமோ அளியம் - யாம் மிகவும் அளிக்கத்தக்கவர்களே
ஆகின்றோம், (எ - று.)

 


     (பாடம்) 1. மெலிபவ ரெளிய நீரார்.