பக்கம் : 462
 
 

கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் 1துய்ப்பக் கொண்டு
சென்றுறு மிறைவர்க் கெம்வா யின்னுரை 2தெரிமி னென்றான்.
 

     (இ - ள்.) நிலமன்னன் - பயாபதி அரசன், என்று தன் மனத்தின் எண்ணி -
இவ்வாறு தன்மனத்தினுள்ளே சிந்தனை செய்து, இலங்குகோற் கையராகி நின்ற கேசரரை
நோக்கி - விளங்குகின்ற கோல்பிடித்து நிற்கின்ற விச்சாதரராகிய தூதர்களைப் பார்த்து,
அனைய சொன்னார்க்கு - அங்ஙனம் கூறிய நும் அரசனுக்கு, யாம் ஒன்றி - யாம் மனம்
பொருந்தி, இங்கண் உள்ளது ஒருப்படுத்து உய்ப்பக் கொண்டு சென்று - இவ்விடத்தில்
உள்ள பொருளை ஒருங்குதிரட்டிச் செலுத்த அவற்றை நீயிர் கைக் கொண்டு போய்,
நும்இறைவர்க்கு எம்வாய் இன்னுரை தெரிமின் என்றான் - நும் அரசனாகிய
அச்சுவகண்டனுக்கும் யாங்கூறிய இனிய முகமன் மொழிகளைக் கூறுங்கோள் என்று
சொன்னான், (எ - று.)

     இவ்வாறு சிந்தித்துத் தூதரைப் பார்த்துப் பயாபதி வேந்தன் கூறுகின்றவன்.
தூதர்களே அவ்வாறு கட்டளையிட்ட அச்சுவகண்ட மன்னனுக்கு; யான் ஈண்டுள்ள
பொருள்களைத் திரட்டித் தருவல் நீயிர் அவையிற்றை அம்மன்னன்பாற் சேர்த்து என்
வணக்க வுரையையும் கூறுங்கோள் என்றான் என்க.
 

( 99 )

பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள்
செலுத்த நினைதல்

672.

ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் 3கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் 4கனல்பவா லவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான்.

 

     (இ - ள்.) ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்கோன் - சிங்கங் களுக்கும் அரசாகிய
சிங்கத்தை ஒத்த பயாபதி மன்னன், அனையகூறி - தூதரிடத்து அவ்வுரைகளைச் சொல்லி,
வாளிவிற்றடக்கை வெம்போர் - அம்புவிடும் விற்படை பிடித்த பெரிய
கைகளையுடையவரும். வெவ்விய போரிக்கண் வல்லவரும் ஆகிய, காளைகள் இதனைக்
கேட்பில் கனல்பவால் - காளைபோன்றவராகிய என்மக்கள் விசய திவிட்டர்கள்
இச்செய்தியைக் கேட்பார்களாயின் வெகுள்வார்கள் ஆதலால், இவரையின்னே மீளுமாறு
அமைப்பன் என்று - இத்தூதுவர்களை (அவர்கள் அறியு முன்னரே) இப்பொழுதே
திரும்பிச்செல்லுமாறு செய்குவல் என்று நினைத்து, வேண்டுவ விதின் ஈந்தான் - அவர்கள்
செல்வதற்கு வேண்டியவற்றை முறைப்படி வழங்கினான், (எ - று.)

 


     (பாடம்) 1. துய்ய. 2. கொடுமின். 3. கூவி. 4. கனல்பவர்.