(இ - ள்.) செய்யவாய் - சிவந்த வாயையும், பசும்பொன் ஓலை - பசிய பொன்னாலாகிய காதணியையும், சீறடி - சிறிய அடிகளையும், பரவை அல்குல் - பரந்த குய்யத்தடத்தையும், ஐயநுண் மருங்குநோவ அடிக்கொண்ட குவவுக்கொங்கை - உண்டோ இல்லையோ என்று ஐயுறுதற் கேதுவாய் நுணுகிய இடை வருந்துமாறு அடியிட்டுத்திரண்டு பருத்த கொங்கைகளையும், வெய்யவாய் - கொடியனவாய், தண்ணென் நீலம் விரிந்தென விலங்கி நீண்ட மையவாம் கண் - குளிர்ந்த நீலோற்பலம் மலர்ந்தாற் போன்ற தோற்றத் தவாய் அகன்று நீண்டு மை தீட்டப்பட்ட கண்களையும், மழைக்கூந்தல் - மழைபோன்ற அளகக் கற்றையையுமுடைய; மகளிரை வருக என்றான் - மகளிர்கள் வருவாராக என்று கட்டளையிட்டான், (எ - று.) வாயையும், ஓலையையும் சீறடியையும், அல்குலையும், கொங்கை யையும், கண்ணையும் கூந்தலையும் உடைய நாடகமகளிரை வருக என்றான் என்க. |