பக்கம் : 465
 

     (இ - ள்.) பாடலால் - இசை பாடுதலில், நரம்பின் தெய்வம் - யாழின்
அதிதேவதையாகிய மாதங்கி, படிவங் கொண்டனைய நீரார் - உருக்கொண்டு
தோன்றியதொத்த தன்மையுடையார், ஆடலால் - கூத்தாடுதலின்‘ அரம்பை ஒப்பார் -
தேவமகளிர்களை ஒப்பாகும் தன்மையுடையார், மாடெலாம் - பக்கமெங்கும், எரிந்து
மின்னும் வயிரக் குண்டலத்தோடு அம்பொன் தோடு - சுடர்வீசி மின்னாநின்ற வைரம்
என்னும் மணியாற் செய்த குண்டலங்களும் அழகிய பொன்னாலாய தோடுகளும், உலாம் -
உலவாநின்ற, துளங்கித் தோன்றும் சுடிகை - மிளிர்ந்து காட்சியளிக்கும் நுதற்
சுட்டியையுடைய; வாண் முகத்து நல்லார் அவரில் - ஒளிமுகத்தையுடைய அவ்வாடன்
மகளிரில், ஆயிரவரை ஈந்தான் - ஆயிரமகளிரைத் திறையாக நல்கினான், (எ - று.)

     தோடுலாம் முகம், சடிகைவாண்முகம் எனத் தனித்தனி கூட்டுக. நல்லார் நரம்பின்
றெய்வம் படிவங் கொண்டனைய நீரார், அரம்பை, ஒப்பார், ஆயிரவரைப் பயாபதி
திறையாக ஈந்தான் என்க. நரம்பின் தெய்வம் என்றது யாழ்த் தெய்வமாகிய மாதங்கியை.
 

( 104 )

வேறு
பயாபதியின் மனநிலை

677.

காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண 1மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக் கோவை
யேந்தெழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
2யாய்ந்தெழின் மகரப் பூணா 3னுவப்பன வனைத்து மீந்தான்.
 

      (இ - ள்.) காய்ந்தொளிர் - கனன்றெரிவது போன்று ஒளிரும், பவளச்சாதி
கடிகைகள் - பவள வகைகளான துண்டுகளும்; காணமின்னுப் பாய்ந்து எழுசுடர் சங்கீன்ற
பருமணித் தரளக்கோவை - விரும்பிக் காணுமாறு மின்னல்கள் பாய்ந்தெழுந்து மிளிரும்
சங்குகள் ஈன்ற பரிய மணிகளாகிய முத்துக்களாலய மாலைகளும், ஏந்தெழில் காகதுண்டம் -
மிக்க அழகுடைய அகில்களும், மருப்பிணை - யானைக் கோடுகளும், கவரிக்கற்றை -
கவரிமான் மயிர்க் கற்றைகளும், ஆய்ந்தெழின் மகரப் பூணான் உவப்பன -
ஆராய்ந்தெடுத்து அழகுடைய மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய
அச்சுவகண்டன் விரும்பிய பொருள்கள், அனைத்தும் ஈந்தான் - முழுதும் கொடுத்தான்,
 (எ - று.)

     பவழக் கடிகைகள், தரளக்கோவை, காகதுண்டம், மருப்பிணை, கவரிக் கற்றை
ஆகியவற்றைப் பூணான் திறையாகக் கொடுத்தான் என்க.

( 105 )


     (பாடம்) 1. மின்னும். 2. வாய்ந்தெழின். 3. உவப்பவன்.