பக்கம் : 467
 

     சொல் விடுத்து மறுமாற்றங்கூற மாட்டாதவராய், துட்கு என்று துளங்க - இனி யாதாங்
கொல்; என அஞ்சித்துடுக்கென்று நடுங்கா நிற்ப, ஆங்கோர் கொல்நவில் பூதம் போலும்
குறள்மகன் - அவ்விடத்தே நின்ற கொலைத் தொழில்வல்ல பூதத்தை ஒத்த ஒரு குறளன்
துணிவுகொண்டு, இதனைச் சொன்னான் - பின் வருமாறு சொல்வானாயினான், (எ - று.)

     திவிட்டனுக்கு விடைகூற எல்லாறும் அஞ்சவும், துணிந்து கூறிய குறள்மகன்
தறுகண்மை தோன்ற, “கொன்னவில் பூதம் போலும் குறள் மகன்“ என்றார். மகளிருடைய
கூனரும் குறளரும் இருத்தல் வழக்கம்.
இத்தூதுவர் யார்? இது விளைந்தவாறு என்? என்று திவிட்டன் ஆண்டு நின்றாரை வினாவ
அவர்கள் அஞ்சி உரைகொடாது நிற்பப் பூதம் போலும் குறள்மகன் சொன்னான் என்க.
 

( 107 )

குறளன் கூற்று

680.

அறைகழ லரவத் தானை யச்சுவக் கீரிவ னென்பா
னிறைபுக ழாழி நிலமெலாம் பணிய நின்றான்
திறைதர வேண்டும் என்று விடுதரச் 1செருவந் தானை
யிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்.
 

      (இ - ள்.) அறை கழல் அரவத்தானை அச்சுவக்கிரீவன் என்பான் -
ஆரவாரிக்கின்ற கழலையும், முழக்கத்தையும் உடைய படைகளுக்கு வேந்தனான
அச்சுவகண்டன் என்பவனும், நிறை புகழ் ஆழி தாங்கி நிலம் எலாம் பணிய நின்றான் -
நிறைந்த கீர்த்தியையுடைய சக்கரத்தை ஏந்தி உலகெலாம் பணியுமாறு
விளங்குகின்றவனுமாகிய வேந்தன், திறைதர வேண்டும் என்று விடுதர - உன்
தந்தையின்பால் திறையிறுத்தல் வேண்டும் என்னும் செய்தியைச் சொல்ல இத்தூதரைவிட,
செருஅந்தானை இறைவனும் - போர்வல்ல அழகிய படையையுடைய நம் பயாபதி
வேந்தனும், அருளிச் செய்தான் - அச்சுவகண்டன் உவந்த பொருள்களை
அளிப்பானாயினன், இது இங்கு விளைந்தது என்றான் - இந்நிகழ்ச்சியே இப்பொழுது
இவ்விடத்தே நிகழ்ந்தது என்று அக்குறளன் கூறினான், (எ - று.)

     “செரு வந்தானை இறைவனும்“ என்றது பயாபதி திறைகொடுப்பது தகுதியன்று என்பதைக் குறிப்பான் உணர்த்தியது.

     நிலமெலாம் பணிய நின்ற அச்சுவகண்டன் திறைதரவேண்டும் என்று தூதரை
விடுதரச் செருவந்தானை இறைவனும் அருளிச்செய்தான், இது இவ்விடத்தே நிகழ்ந்தது
என்றான் என்க. அருளிச்செய்தான் என்றது இகழ்ச்சி.

( 108 )


     (பாடம்) 1. சேருந், செருவெந்.