பக்கம் : 468
 

இதுமுதல் மூன்றுசெய்யுள் ஒருதொடர், திவிட்டன் சீற்றம்
வேறு

681.

1திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு
நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் 2தீக்கலுண்
3முறைக்கெட முளைப்பதோர் முனிவி னொள்ளெரி
கறைப்படு படையவன் கனல மூட்டினான்.
 

     (இ - ள்.) திறைக்கடன் என்னும் - அக்குறளன் இது நுந்தை அச்சுவகண்டனுக்கு
இறுக்கும் திறையாகிய கடமைப் பொருள் என்ற, அத்தீச்சொல் - அக்கொடுஞ் சொல்லை,
கேட்டலும் - கேட்டவுடனே; நிறைக்கடல் நிரம்பிய - நிறைந்த கடல் போன்று கல்வி
கேள்விகளான் நிரம்பிய, நெஞ்சத் தீக்கலுள் - திவிட்டனுடைய நெஞ்சமாகிய சூரியகாந்தக்
கல்லின்கண், முறைகெட முளைப்பதோர் முனிவின், தன் மரபு முறைமை கெடுதலானே
தோன்றிய சினமாகிய, ஒள்ளெரி - ஒள்ளிய நெருப்பினை, கறைப்படுபடையவன் -
குருதிக்கறை பட்ட வேற்படையையுடைய அத்திவிட்டநம்பி, கனலமூட்டினான் - மேலும்
மேலும் கனன்றெரியும்படி வளர்த்துக் கொண்டனன், (எ - று.)

     கேள்விக் கின்னாதாதலின் தீச்சொல் என்றார். நிறைக்கடல் முறைக் கெட கறைப்படு
என்பன எதுகை நோக்கி வருமொழி வல்லெழுத்து மிக்கு நின்றன. தீக்கல் -
சூரியகாந்தக்கல். முறையாவது - தம்மரபினர் பிறர்க்குத் திறை கொடாமையாகிய முறைமை.
அது கெடுதலானே தோன்றிய முனிவு என்றவாறு. தீங்கலுள் என்றும் பாடம். இதனை
மெலித்தல் விகாரமாகக் கொள்க. அதனை எண்ணுந் தோறும் சினம் மிகுதலின் கனல
மூட்டினான் என்றார்.
 

( 109 )

 
682.

முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேற்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி
யடுத்தெழு சுடராகத் துக்க நெய்த்துளி
4கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே.
 

     (இ - ள்.) முடித்தலைமுத்து உதிர்ந்தாங்கு - முடியின்கண் உள்ள முத்துக்கள்
உதிர்வதைப்போல, சிறுவியர்புள்ளி நெற்றி மேற் பொடித்தன - சிறிய
வியர்வையாலுண்டாகிய புள்ளிகள் போன்ற நீர்த்துளிகள் தோன்றி உதிர்ந்தன; செங்கணும் -
சினத்தாற்சிவந்த கண்களும், ஒள்ளெரி அடுத்து எழுசுடரகத்து - ஒளியுடன் பற்றி எரிகின்ற
நெருப்பினுள்ளே, உக்க - பெய்யப்பட்ட, நெய்த் துளிகடுத்த - நெய்த் துளியை ஒத்த;
நீர்த்திவலை கான்றவே - வெப்பமுடைய நீர்த்துளிகளைச் சிதறின, (எ - று.)

 

     (பாடம்) 1. திறைக்கடன் வேண்டினனென்னுந் தீச்சொற்றான். 2. தீங்கலுண். 3. முறைக்கட. 4. கடுத்த வாட் கண்ணுநீர்த்துவலை கடுத்தவன்.