தீயுடைய கண்களோடு கூடிய, அரவின் படமுடை மணிகொள - பெரும் பாம்பின் படத்தின்கண் அமைந்த தலைமணியைக் கவர்ந்து கொள்ள, கருதிப் பார்ப்பதோர் - நினைக்கின்றறை ஒப்பதோர், மடம் உடை மனத்தன் - அறியாமையுடைய மனத்தவன் ஆதல் வேண்டும், (எ - று.) மன்னன் மனத்தன் என்க. மயக்கமுடைய அச்சுவகண்டன் அரவின் மணிகொளப் பார்ப்பதோர் மடமுமடை மனத்தன் என்றான் என்க. |
(இ - ள்.) எம்அருங்கலம் இவை - எம்பாலுள்ள பெறற்கரிய அணிகலன்களாகிய இவற்றை, இருங்கலிப் படையினும் - பெரிய முழக்கத்தையுடைய நும்படைகளைக் கொண்டாதல், இகலினாலும் - எம்பால் பகைமை பூண்டு போர் செய்தலினாலாதல், பெறற்கு அரியது - எய்துதல் இயலாது, ஆவதோர் மருங்குஉள தெனின் - இவற்றைப் பெறுதற்கு ஒரு வழியுளதோ எனில், அது மகளிரால் சில பெருங்கலம் தாங்கினாற் பெறலும் ஆகும்-அவ்வழியாவது கூத்தாடும் மகளிரோடு நும்மரசன் யாழேந்திப் பாடி இரவலனாகவரின் அவற்றைப் பரிசிலாக எளிதிற் பெறலாம் என்பதே, (எ- று.) பெருங்கல மாவதுபேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவுசாணும், பத்தரளவு பன்னிருசாணும் இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும் உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்து இயல்வது; (சிலப் - அடியார்க்குநல்லார் உரைப்பாயிரம்) இச்செய்யுளோடு “அளிதோ தானே பாரியது பறம்பு................. யானறிகுவனது கொள்ளும் ஆறே, சுகிர்புரி நரம்பின் சீறியாழ்பண்ணி, விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர, ஆடினர் பாடினர் செலினே, நாடுங் குன்றும் ஒருங் கீயும்மே‘ எனவரும் புறப்பாட்டு நினைக்கத் தக்கதாம். (புறநா - 109). அரியது : பன்மை ஒருமை மயக்கம். |