பக்கம் : 472
 

     (இ - ள்.) ஏழைகாள் - அறிவில்லாத எளியவர்களே ! பண்டு எலாம் - பழைய
காலத்திலெல்லாம், பாழியால் மெலிந்தவர் திறத்து - வலிமையின்மையால்
மெலிந்தவரிடத்தே சென்று, ஆழியால் வெருட்டி - நும்சக்கரப்படையைக் காட்டி அவரை
அச்சுறுத்தி, நின்று அடர்த்திர் போலும் - அஞ்சாமல் நின்று அவரைவென்று
திறைகொண்டனிர் போலும், அஃது இனியொழிந்திட்டு - அங்ஙனம் அச்சுறுத்தும்
தொழிலை இனி விடுத்து, வாழும் ஆறு செவ்வனே அறிந்து - நீயிர் உங்கட்கே கேட்டினை
வலிந்து தேடிக்கொள்ளாமல் நன்கு வாழ்வதற்குரிய வழிகளை நன்றாக ஆராய்ந்
தறிந்துகொண்டு, உயிர் காத்து வாழ்மின்-உங்கள் உயிரை ஓம்பி வாழ்க! (எ-று.)

     பாழி - வலிமை. பாழியின்மையால் மெலிந்தவர் என்க. ஒழிந்திட்டு - ஒருசொல். செவ்வனே - செம்மையுடனே.
 

( 116 )

 
689. அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொரு
குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கயா
னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன
வென்றியம் பகழியும் விசும்பு மீவனே.
 

     (இ - ள்.) அன்றெனில் திறைகொளக் கருதின் - அவ்வாறன்றித்
திறைப்பொருள்கொண்டே தீர்வதென்று நீயிர்நினைவீராயின், குன்றின்மேல் பெறுவதென் -
உத்தரசேடி என்னும் அம்மலையின்மேல் இருந்தவாறே நீயிர் பெறக் கிடந்ததென்னை! வந்து
- அச்சுவகண்டன் இவ்விடத்திற்கு வந்து, யான் நின்று தன் நெஞ்சம் நிறைய
வீழ்வனவென்றியம் பகழியும் விசும்பும் - நான் அவன் முன்னர் நின்று விரும்பிய அவன்
நெஞ்சிடம் நிறைந்து வீழும்படி வெற்றிமிக்க அம்புகளையும் மேலும் துறக்க நாட்டையும்,
ஈவனே! கொள்க! - வரையாது வழங்குவேன் அவன் ஏற்றுக் கொள்வானாக! (எ - று.)

     வாழுமாறறிந்து அடங்கி வாழாது திறைகொள்ளக் கருதுவான் அச்சுவகண்டன் எனின்,
வரையிடத்தே யிருந்து பெறற்கியலாது, அவன் வருக! அவன் நெஞ்சினக நிறைய எம்
மம்புகளாகிய திறையை ஏற்க! வானாடும் தருவல் கொள்க! என்றான் என்க.
 

( 117 )

 
690. இறைவளை மகளிர்போற் கழறி யென்னையெங்
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்
முறையுள தெனினது முயன்று கொள்கவே.