பக்கம் : 478
 

வீழவும், அடித்து அலைகலங்கி - அவ்வொலி தாக்கி அலைத்தலாலே கலக்கமுற்று, வேழம்
பிடிகளோடு அலறி ஆழ - களிறுகள் பிடியானை களோடு கதறி வீழவும், புடைத்துழி -
நெல்லை முறத்திலிட்டுப் புடைக்கும் பொழுது, பதடிபோல - பதர்கள் பறந்து வீழ்தல்போல,
துறுகற்கள் புரண்டு பொங்க - மலையடிவாரங்களில் கிடக்கும் குண்டுக் கற்கள் புரண்டு
குவியவும், இடித்தலின் - இடிபோல முழக்கம் செய்தலாலே, மனித்தர் எல்லாம் -
அந்நாட்டின் வாழும் மனிதர்கள் எல்லோரும், எயிறுறஇறுகி - பற்கள் கிட்டி, சோர்ந்தார் -
மூர்ச்சையுற்றனர், (எ - று.)

     அடித்தலை கலங்கி - அடித்து அலைத்தலால் கலங்கி என்க. அரிகேது
முழங்கியவுடன் வீழ, அலறியாழ, புரண்டு பொங்க. மனிதர் எல்லாம் பல்லிறுகி
மூர்ச்சையுற்றனர் என்க.
 

( 127 )

அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்

700.

அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
மெய்ப்புடை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை 1மீட்டே
யிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மீனி ரென்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான்.
 

      (இ - ள்.) அப்படி அவனை அவ்வாறு அமைத்தபின் - அங்ஙனமாக அரிகேது
என்பவனை அவ்வழியிற் செலுத்திய பின்பு, அமைச்சன் - அரிமஞ்சு என்னும் அமைச்சன்,
ஆங்கண் - அப்போதனமாநகரத்தே சென்று, மெய்ப்புடை தெரிந்து - உண்மையான
பகுதியை அறிந்து வந்து, சொன்ன தூதுவர் அவரை மீட்டே - கூறிய தூதுவர்களை
மீண்டும் அழைத்து, நீர் இவைகள் இப்படி சொல்லிப் பெயர்மின் என்று - நீயிர்
இவையிற்றை இவ்வாறு கூறி வாருங்கள் என்று கூறி, வென்றிக் கைப்படை நவின்ற
வெம்போர்க்காளையை - வெற்றிமிக்க விற்படையில் புகழப்பட்ட வெவ்வியபோர்
செய்தலையுடைய திவிட்டனை, கனற்றவிட்டான் - வெகுள்விக்குமாறு ஏவிவிட்டான்,
(எ - று.)

     அரிகேதுவினை மாயச்சிங்கமாகப போக்கிய பின்னர், முன்னர்ச் சென்ற தூதுவரையே
மீண்டும் அழைத்து, நீயிர் திவிட்டன்பாற் சென்று இவை இவைகூறிப் பெயர்மின் என்று,
திவிட்டனுக்குச் சினமுண்டாக்கும் பொருட்டு ஏவினான் என்க.

( 128 )


     (பாடம்) 1. யிட்டே.