(இ - ள்) ஆங்குத் தூதுவர் - அவ்விடத்தே தூதர்கள், அதிர்முகில் ஆறு சென்று இழிந்து - முழங்குகின்ற மேகமண்டலத்தின் வழி விரைந்து சென்று இறங்கி, பூங்கண் தேமொழிப் போதனத்திறைவன்றன் - அழகிய கண்களையுடையவனும் இன்சொல் மொழிபவனும் போதனமாநகரத்து மன்னனும் ஆகிய பயாபதி வேந்தனுடைய, புதல்வர் - மக்களாகிய விசயதிவிட்டர்கள், வீங்கு பைங்கழல் - விசைத்துக்கட்டிய பசிய பொன்னாலாகிய கழல் அணிந்தவராகி, விடுசுடர் மிடைமணிப்பூணோர், வீசுகின்ற ஒளிக்கற்றைகள் நெருங்கிய அணிகலன்களைப் பூண்டவர்களாய், ஓங்கு தானையோடு, - மிக்க படைகளுடனே, உலாப்போந்த இடம் சென்று - உலாவுதல் நிமித்தமாச் சென்றுள்ள ஓரிடத்திற் சென்று கண்டு, ஈது உரைத்தார் - இவ்வார்த்தையைச் சென்னார், (எ - று.) வீங்கு - வீக்கு. மெலித்தல் விகாரம், அத்தூதர்கள், அவ்வாறே விசும்பின் வழிச்சென்று; விசயதிவிட்டர்களை உலாப் போமிடத்தே கண்டு பின் வருமாறு கூறினார் என்பதாம். |
(இ - ள்.) குமர - இளைய வேந்தே, திறையின் மாற்றமும் - திறைப்பொருள் கொண்ட செய்தியும், நீ திறையினை விலக்கிய திறமும் - பின்னர் நீ திறைகொடேன் என்று அவற்றை விலக்கிய செய்தியும், குறையென்று எங்களைப் பணித்ததும் கூற - எம் குறையாக உம் அரசனிடம் கூறுக என நீ கட்டளையிட்ட செய்தியும் எம் அரசன்பால் யாம் கூறினேமாக, அறையும் பைங்கழல் ஆழியந் தடக்கை எம் அரசன் - ஆரவாரிக்கின்ற பசிய வீரக்கழலணிந்தவனும் சக்கரப்படையேந்திய பெரிய கைகளையுடைய வனும் எம்முடைய அரசனும் ஆகிய, நறையும் குஞ்சியான் - மணங்கமழும் தலைமயிரையுடைய அச்சுவகண்டன், நன்று நன்று எனச்சொல்லி நக்கான் - சினமிக்கு நன்றுநன்று என்று கூறி நகைத்திட்டான், (எ - று.) |