வணக்கின் அல்லது - தன்பணிவுடைமையினாலே தன்வழிப்படுத் துவதல்லாமல்; சீறி நின்று - சினந்துபோய்; எவரையும் செகுப்பது இல்லை - எத்தன்மையுடையார்களையும் கொல்லுதல் இல்லை. (எ - று.) பயாபதி மன்னன் எவரையும் வருத்தி இறைப்பொருள் வாங்குதல் இல்லை. பகைவராயினாரையும் தன் பணிவுடைமையினால் தன் வழிப்படுத்து வானேயல்லாமல் கொன்று தொலைக்கமாட்டான். ஏகாரம் இரண்டும் தேற்றப் பொருளைத் தந்து நின்றன. இல்வாழ்வார், “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை“ யாய அறமாகலின் இவற்றிற்கு ஐந்து பகுதிகளை வைத்துக்கொண்டு அரசனுக்கு ஒரு பகுதியைக் கொடுத்தல் முறைமையாகும். பயாபதி அருக சமயத்த வனாகலின் பகைவர்களையும் கொல்லாதவனாயினான். |
( 19 ) |
மன்னனின் முந்நிழல் |
55. | அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர் முடிநிழன் முனிவரர் 1சரண மூழ்குமே வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன் குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே. |
(இ - ள்.) வடிநிழல் வனை கதிர் எஃகின் மன்னவன் - தீயிலிட்டுக் காய்ச்சி அடிக்கப்பட்டு ஒளியைச் செய்கின்ற கூர்மையுள்ள வேற்படையை யுடைய பயாபதி மன்னனது; அடிநிழல்-கால் அடிகளின் நிழல்; அரசரை அளிக்கும் - பிற நாட்டுச் சிற்றரசர்களைப் பாதுகாக்கும்; ஆய்கதிர் முடிநிழல் - சிறந்த ஒளியையுடைய முடியின் நிழல் முனிவரர் சரணம் மூழ்கும் - சிறந்த முனிவர்களது திருவடிகளிலே படியும்; குடை நிழல் - வெண்கொற்றக் குடையின் நிழல்; உலகு எலாம் குளிர நின்றது - உலகத்திலுள்ள உயிர்த் தொகைகளெல்லாம் இன்பத்தையடையுமாறு சிறந்து நிற்கும். (எ - று.) பயாபதி மன்னனுடைய அடிநிழல் சிற்றரசர்களைப் பாதுகாக்கும்; முடிநிழல் முனிவர்களது திருவடிகளிலே படியும்; குடைநிழல் உலகத்துயிர்கட்கு இன்பத்தையளிக்கும். முனிவர்-காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் முனிந்தவர். வரர்-மேலானவர். குளிர நிற்றல் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்தை யடைந்திருத்தல். |
|
(பாடம்) 1. சரண மூழ்குமோ; முள்குமே. |