(இ - ள்.) தளையின் விண்டு தேன் தயங்கிய தார் தடங்கொள் மார்ப - கட்டவிழ்ந்து தேன் ததும்பி, விளங்கிய மலர் மாலையையுடைய அகன்ற மார்பனே!, எங்கள்வாய் நீ இளையை என்பதும் கேட்டபின் - எங்கள் வாயிலாய் நீ ஆண்டான் மிகவும் இளைஞன் என்னும் செய்தியையும் கேட்டறிந்த பின்னர், இறைவன் - எம் வேந்தன் ஒளியும் ஆற்றலும் தன்கண் ஒன்று உள்ளதும் - தன்னுடைய சீர்த்தியும் வலிமையும் இவற்றின் மேலாய்த் தன்பால் உள்ள ஒப்பற்ற வித்தையையும், நினையான் - எண்ணாதவனாய், அளியன் - பாவம் நம்மால் அளிக்கத்தக்கவன், பிள்ளைதான் உரைத்த - பிள்ளைமையால் கூறியவைகள், என்று - என்று தன்னுள் நினைந்து, அழன்றிலன் அமர்ந்தான் - வெகுளியை அடக்கியவனாய் அமையலானான், (எ - று.) தான் : அசை. பிள்ளை - பிள்ளைமை. ஒன்றுள்ளது - எத்ததைய பகைவரையும் அழிக்கவல்லதாகிய மாயவித்தை அவன்பாலுள்ளது, என்றபடியாம். ஒன்று - ஆழி எனினுமாம். நக்கவன் நீ இளையை என்பது யாம் கூறக்கேட்ட பின்னர், தன்பால் ஒளியும் ஆற்றலும் உள்ளதும் கருதாது, அளியன்! பிள்ளைமை உரைத்தது என்று அழன்றிலன்; அமர்ந்தான், என்றனர் என்க. இம்மொழியெல்லாம் தூதர்க்கு அரிமஞ்சு பயிற்றிவிட்டன வென்க. |