இளைஞனாகிய அத்திவிட்டன், தன் அரும்பெறல் நாட்டினை அரிய எறியும் மின் உரும்என இடித்து - பெறற்கரிய தன் நாடு பிளவுறும்படி வீசுகின்ற மின்னலுடனே இடி இடித்து முழங்கினாற்போல முழங்கும், முழையுள் உறையும் கோளரி - குகையில் உறையும் கொலைத்தொழில் வல்ல அரிமா உண்மையை, அறியும் ஆயில் - அறிந்திருப்பனாயின்; ஒழிக்கலான் - அச் சிங்கத்தை இன்னும் கொன்றொழித்திலன்; அதற்குக் காரணம் என்னை?(எ-று.) அமர்ந்த பின்னர் எம்மரசன். அத் திவிட்டன் என்பான் தன் முன்னோரீந்த திறைப்பொருளை மறுத்த செருக்குடையன் அவன் நாட்டில் ஒரு சீயம் மக்களை நலியா நிற்பவும், அதனைக் கேட்டும் வாளாவிருந்ததேன்! நம்மை அடர்க்கும் ஆற்றலுடையோன் அச்சிங்கத்தை எளிதிற் கொன்று தன்குடிகட்கு நன்மை செய்யலாமே என்றிரங்கினான் என்றார் என்க. இச்சூழ்ச்சி மிக அரிய சூழ்ச்சியாதலறிக. |
(இ - ள்.) என்று - என இவ்வாறு கூறி, மற்றது மொழி மின் - இச்செய்தியைத் திவிட்டன்பாற் சென்று கூறுங்கோள், என்றுரைத்து எமை விடுத்தான் - என்று எமக்குக் கட்டளையிட்டு உன்னிடம் விட்டான், என்ற மாற்றம் அஃதிசைத்தலும் - என்ற அம்மொழிகளைத் தூதுவர்கள் கூறியவுடனே, இளையவன் - திவிட்டனும், என்னே! - என்னே இஃதென்னே! (என வியப்புற்றவனாய்), சென்ற நாட்டகம் சிலம்ப - அவ்வரிமா சென்று முழங்கிய நாட்டினுள் எதிர் ஒலியான் முழக்கம் உண்டாம்படி, நின்று இடித்து - நின்று இடி இடிப்பது போல முழங்கி, உயிர் அலறக் கொன்று - உயிர்த்தொகைகள் அலறும்படி கொன்று திரிவதாகிய, ஓர் கோளரி - சிங்கம் ஒன்று, கொடுமுடி உறைவதோ என்றான் - நம் மலைச்சிகரத்தமைந்த குகையினுள் வதிகின்றதேயோ என்று வினவினான், (எ - று.) என்று இச்செய்தியை உன்னிடம் கூறுமாறு எம்மை ஏவினான் என்றனராகத் திவிட்டன் வியப்புற்று நாடுசிலம்ப இடித்து உயிர் அலறக் கொன்று திரியும் கோளரி ஒன்று நம் மலையில் உளதோ என அயனின்றாரை வினாவினான் என்க. |