பக்கம் : 482
 

அயனின்றோர் அவ் வரிமா உளதெனல்

706.

உளது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்
களைதல் யாவர்க்கு 1மரியது கனமணிக் குன்றி
னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி
2அளவி னீண் 3முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார்.
 

    (இ - ள்.) அதுகேட்டு அயனின்றோர், அடிகள் - அடிகளே! உளது - ஆம்
அங்ஙனமே ஒரு சிங்கம் உள்ளது!‘ வாழி - வாழ்க!, நின் ஒலிபுனல் சிந்துநல் நாட்டில்
உளது கோளரி - உன் ஆட்சியினமைந்த ஓசைமிக்க புனலால் வளமிக்க சிந்து என்னும்
இந்த நல்ல நாட்டிலே உள்ளது கொல்லுதல் வல்ல அவ்வரிமா, களைதல் யாவர்க்கும்
அரியது - கொன்றொழித்தற்கு எத்திறத்தார்க்கும் இயலாத வலியுடையது, உரும்என இடித்து
உயிர் பருகி - இடிபோல முழங்கி உயிரினங்களைக் கொன்று தின்று, கனமணிக் குன்றில் -
சிறந்த மணிகளையுடைய மலையின கண் உள்ள, அளவின்நீள் முழை உறைகின்றது -
அளத்தற்கரிதாய் நீண்ட குகையில் வதிகின்றது, என்றுரைத்தார் - என்று கூறினார்,
(எ - று.)

     நம்பியின் வினாவைக் கேட்டோர், ஆம் அரசே அங்ஙனமே கொடியதோர் அரிமா
நம்மலையில் கொன்று உயிர் பருகி உறைகின்றது என்று கூறினார் என்க.
 

( 134 )

திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் எனச் சூளுறல்

707.

ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற
வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ
னேயிப் பெற்றியே விளைத்தில னாயினும் வேந்தன்
பேயிற் பேசிய பிள்ளையே 4யாகென்று பெயர்ந்தான்.
 

      (இ - ள்.) ஆயின் - அங்ஙமானால், மற்றதன் - அச்சிங்கத்தின், அரும்
வரைப்பிலம் என அகன்ற வாயை - அரிய மலைக்குகை போன்று விரிந்த வாயினை,
போழ்ந்து உடல் இருபிளப்பா வகுத்திடுவன் - கிழித்து அதன் உடல் இரண்டு
பிளவுகளாகும்படி பிளப்பேன், ஏ - ஏ! ஏ!!. இப்பெற்றியே விளைத்திலன் ஆயின் -
இவ்வாறே யான் செய்திலேன் எனின், நும் வேந்தன் பேயிற் பேசிய - உம்முடைய அரசன்
ஆராயாது மருள் கொண்டபேய் போலச் சொல்லிய, பிள்ளையே ஆகென்று -
பிள்ளைமை யுடையேனே ஆவேன் என்று கூறி, பெயர்ந்தான் - புறப்பட்டான், (எ - று.)

 

     (பாடம்) 1. மரிவது. 2. அளவின். 3. முழையுள்ளுறை. 4. யாகெனப்.