பக்கம் : 484
 

     வரப்பெறார் - பாரும் என்னைத் தொடர்ந்து வருதல்கூடாது, தவிர் கென -
ஆதலால் அனைவீரும் அகல்வீராக என்று கூறி, எழில்சேர் உவரி நீர் வண்ணன் - அழகு
மிக்க கடல்வண்ணனாகிய திவிட்டன், உழையவர் ஒழியுமாறு உரைத்தான் - தன்
துணைவர்கள் அகன்று போமாறு கட்டளையிட்டான், (எ - று.)

     குதிரை, யானை தேர், மறவர் என்னும் நால்வகைப் படைகளும் தத்தம்
நிலையிடங்களிலே செல்க; யாரும் என்னுடன் வருதல் கூடாது; எனத் தன் படைகளைத்
தவிர்த்தான் திவிட்டன் என்க.
 

( 137 )

விசயன் திவிட்டனுடன் செல்ல நினைதல்
710.

நகர மாசன மிரைப்பது தவிர்த்தபி 1னளிநீர்ப்
பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்
சிகர மால்வரை 2தெளிந்தனன் திருவமார் பினன்பின்
மகர 3மாகடல் வளைவண்ண னுடன்செல வலித்தான்.
 

     (இ - ள்.) நகரமாசனம் இரைப்பது தவிர்த்தபின் - போதன மாநகர்க்கணுள்ள
குடிமக்கள் தன்னைத் தடுத்தலான் எழுந்த ஆரவார ஒலியை அடக்கிய பின்னர், நளிநீர்
பகருமா கடல் படிவம் கொண்டனை யவன் படர - செறிந்த நீரையுடைய புகழ்மிக்க கரிய
கடல் ஓர் இளைஞனுருவம் கொண்டாற் போன்ற வண்ணத்தையுடைய திவிட்டன் செல்ல,
சிகரமால் வரை - முடியையுடைய மலையை ஒத்த, திருவமார்பினன் - அழகிய மார்வத்தை
யுடையவனும், தெளிந்தனன்பின் - அறிவுத் தெளிவுடையவனும் ஆகிய திவிட்டன் பின்னர்,
மகரமா கடல் வளை வண்ணன் - மகரமீன்கள் உலாவும் பெரிய கடற்கணுள்ள சங்கை ஒத்த
வெண்ணிறவண்ணனாகிய விசயனும், உடன்செல வலித்தான் - அவனோடு செல்லுதலை
எண்ணினான், (எ - று.)

     நகர மக்களின் ஆரவாரத்தை அகற்றிய பின்னர், நம்பி தனியே புறப்பட்டுச் செல்ல, விசயனும் அவனோடு செல்ல எண்ணினன் என்க.
 

( 138 )

இருவரும் அவ் வரிமா வதியும் இடம் எய்துதல்

711.

புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற
கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த
வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
தொழிற்கொண்டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்.
 

   


      (பாடம்) 1. னணிநீர்ப். 2. தெளிர்த்தனன். 3. மால்கடல்.