பக்கம் : 487
 

     நெடியவன் நீ எங்குத்தான் போதி என்று, பின்பற்றிக் கூற்றமும் திசைகளும்,
விசும்பும் நடுங்க விரைந்து துரத்தினான் என்க.
 

( 142 )

திவிட்டன் ஓடும் தன்மை
715.

கழலங் கார்த்தில கால்களு நிலமுறா முடங்கா
அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா
குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு
மெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே.
 

     (இ - ள்.) அங்கு - அங்ஙனம் ஓடுமிடத்தே, கழல் ஆர்த்தில - வீரக்கழல்கள்
ஒலித்தன இல்லை, கால்களும் நிலம் உறா - கால்கள் நிலத்தின் மேல் பொருந்தவில்லை,
முடங்கா - முடங்கவில்லை, அழலும் செஞ்சுடர்க் கடகக்கை அவை - மிளிருகின்ற
செவ்விய ஒளியையுடைய கடகமணிந்த கைகள், புடைபெயரா - பக்கத்தே இயங்கவில்லை; குழலும் குஞ்சியும் - குழற்சியையுடைய தலைமயிரும், மாலையும் - மலர்மாலையும்,தொடரும் - மணிமாலைகளும், எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே -
அழகு செய்யும் தோளின் மேலும் பிடரின் மேலும் பொருந்தியபடி கிடந்தில, வேகத்தால்
மேல் எழுந்தபடியே நின்றன, (எ - று.)

     குழலுதல் - குழற்சியுடைத்தாதல். அது, குழலுடைச் சிகழிகைக் குமரன் தோளினை
(சிந்தா - குண - 242) என வரும் சிந்தாமணியானும், தொடையமை நெடுமழைத்
தொங்கலாமெனக் கடைகுழன்று என்னும் (சூர்ப் - 23) இராமாவதாரத்தானும் அறிக.
எழிலுதல் - அழகு செய்தல்.

     கழல் முதலியன ஒலித்தில. குஞ்சி மாலை முதலியன எழுந்தபடியே நின்றன;
அவ்வளவு விரைவின் ஓடினன் என்பதாம்.
 

( 143 )

இதுவும் அது

716.

மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த
நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த
வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா
முரங்கொ டோளவன் விரனுதி 1யுறவுடைந் தொழிந்த.
 

     (இ - ள்.) மரங்கள் வேரொடும் கீழ்ந்தென - கானகத்திலுள்ள மரங்கள் வேரோடும்
அகழ்ந்தெடுக்கப்பட்டாற் போன்று, வழி தொடர்ந்து - அரிமாவும்
 


      (பாடம்) 1. யுறவுடன் றெழுந்த.