பக்கம் : 489
 

     (இ - ள்.) உலத்தின் வீங்கிய - உலக்கல்லை ஒத்துத் திரண்ட, ஒளிமணிச் சுடரணி
திணிதோள் - ஒளிரும் மணிகளில் எழும் சுடர் அழகு செய்யப் பெற்ற திண்ணிய
தோளினது, நலத்தின் வீங்கிய - நலமாகிய ஆற்றலான் மிக்க, நளிர் புகழ் இளையவன் -
செறிந்த புகழை யுடைய திவிட்டனுடைய, விசையின் - வேகத்தால், நிலத்தின் கம்பமும் -
பூமியில் ஏற்பட்ட நடுக்கமும், நெடுவரை அதிர்ச்சியும் - நீண்ட மலைகளில் உண்டாகிய
அதிர்ச்சியும், எழுவ - தன்னை எழுப்புதலாலே, பிலத்தின் வாழ் அரியரசு - அந்தக்
குகையில் வாழ்வுற்றிருந்த சிங்கமாகிய விலங்கரசு, தன் துயில் பெயர்ந்தது-தனது உறக்கம்
கலைக்கப்பட்டு விழித்தெழுந்தது, (எ - று.)

     திவிட்டன் சென்ற விரைவினாலே உண்டாகிய பூமிநடுக்க முதலிய வற்றால்
அக்குகையுள் உறங்கிக் கிடந்த அரியரசு துயில்கலைந்து எழுந்த தென்க.

( 146 )

திவிட்டன் முழக்கம்

719.

ஈங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா
யோங்கு 1மால்வரை பிளந்திடு கெனவுளைத் துரவோ
னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்
வீங்கு வாய்திறந் 2தொலித்தது விலங்கலிற் சிலம்பே.
 

     (இ - ள்.) ஈங்கு - இவ்விடத்தே, இருள்கெழுமுழையகத்து - இருள்செறிந்த
இக்குகையினுள்ளே, வாழிய - (என்னிற்றப்பி) உயிர்வாழ்தலைக் கருதி, ஒளித்தாய் -
ஒளிந்துகொண்டாய், ஓங்குமால்வரை பிளந்திடுகு - உயரிய வலிமை மிக்க இம் மலையைப்
பிளப்பேன் (பார்), என - என்று சினந்துகூறி, உரவோன் உளைந்து - திவிட்டன் வருந்தி,
ஆங்கு அம்மாமுழை முகத்து நின்று - அவ்விடத்தே அப்பெரிய மலையின் முன்னின்று,
உலகதிர ஆர்த்தான் - உலகமெல்லாம் அதிரும்படி ஆரவாரித்தான், விலங்கலிற் விலம்பே
வீங்கு வாய்திறந்து ஒலித்தது - மலையின் கண்உண்டாய எதிரொலியானது தன் பெரிய
வாயைத் திறந்து முழங்கிற்று, (எ - று.)

     விலங்கலிற் சிலம்பு - மலையிடத்தே உண்டான எதிரொலி. பிளந்திடுகு -
பிளந்திடுவேன்.இம் முழை புக்கு என்னைத் தப்பி உயிர் வாழவோ! எண்ணினை? இவ்வரை
பிளந்திடுகு என்று நம்பி ஆர்த்தான்; எதிரொலியும் ஆர்த்தது என்க.

( 147 )


     (பாடம்) 1. நூல். 2. தொலித்த தில்.