(இ - ள்.) மன்னிய - தன்னுள் நிலைபெற்ற; பகைக்குழாம் ஆறும் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் உட்பகைகள் ஆறும்; வையகம் துன்னிய அரும் பகைத்தொகையும் - நிலவுலகத்தில் பொருந்திய வெல்லுதற்கரிய வெளிப்பகைக் கூட்டங்களும்; இன்மையால் - இல்லாதபடியால்; தன்னையும் தரையையும் காக்கும் என்பது - தன்னு யிரையும் உலகத்துயிர்களையும் காப்பாற்றுவான் என்பதைப் பற்றி; அம் மன்னவன் திறத்து - அவ்வரசனுடைய செயலிலே; இனி மருளவேண்டுமோ - நாம் இன்னமும் ஐயப்படுதல்வேண்டுமோ? (எ - று) ஓ : அசை. ஒரு மன்னவன் காமம் முதலிய உட்பகைகளையும், வெளிப் பகைவர்களையும் பெற்றிருப்பானாயின், அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்கே இயலாத நிலையிலிருப்பான். அகப்பகையும் புறப்பகையும் அற்றவனோ தன்னைப் பாதுகாத்துக்கொண்டு தன் கீழ் வாழ்வாரையும் பாதுகாக்கக் கூடியவனாவான். அகப்பகை புறப்பகை ஆகிய இருவகைப் பகைகளிலே அகப்பகையே மிகுந்த தீமை புரிய வல்லதாகலின் அதனை முற்கூறினார். வையகம் - எல்லாப் பொருள்களையும் தன்னிடத்தே வைத்திருப்பது. வரும்பகைத் தொகை எனப் பிரித்து மேலும் மேலும் வருகின்ற பகைக்கூட்டங்கள் என்றும் பொருள் உரைக்கலாம். பகைத்தொகை என்றதில், கள்வர், தீமைபுரியும் உறவினர், தீக்குணத் தொழிலாளர், மிக்க மழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி முதலிய எல்லாப் பகைகளையும் அடக்கலாம். |