பக்கம் : 490
 

அக் குகைவாழ் மெய் அரிமாவின் முழக்கம்

720.

அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த
கதிருங் கண்களிற் கனலெரிச் சுடர்களுங் 1கனல
முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே.
 

    (இ - ள்.) அதிர ஆர்த்தலும் - அங்ஙனம் அதிரும்படி ஆரவாரித்தவுடனே,
முதிர்வில் கோளரி - அவ்விளஞ்சிங்கம், அழன்று - சினந்து, தன் எயிற்றிடை - தனது
பற்களிலே, அலர்ந்த கதிரும் - விரிந்த சுடர்களும், கண்களில் கனல் எரிச் சுடர்களும்
கனல - கண்களிலே கனன்று எரியும் சினத்தீயின் சுடர்களும் கனன்றெரிய, முனிந்து எதிர்
முழங்கலில் - சினந்து அவ்வாரவாரத்திற்கு எதிராகத் தானும் முழங்குதலாலே, பெருவரை
நெரிந்து பிதிர்வு சென்றது - அந்தப் பெரிய மலை இடிந்து சிதர்ந்து போயிற்று, அப்பிலமே
பிளந்தது - அக்குகையும் பிளந்தது, (எ - று.)

     எயிற்றிடை அலர்ந்த சுடரும், கண்களில் எரிச்சுடரும் கனல என்க. நம்பி
ஆரவாரித்தலும் அம்மெய்ச் சிங்கம் முனிந்து எதிர் முழங்குதலாலே பெருவரை பிதிர்ந்தது;
பிலம் பிளந்தது என்க.
 

( 148 )

அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்

721.

எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா
லிரிந்த தாயிடை யிருணின்றங் கெழுந்ததவ் வரியே.
 

      (இ - ள்.) எரிந்த இணைக்கண் - சினத்தீ நின்று எரிந்த இரண்டு கண்களின்
ஒளியாலே, இறுவரை முழைநின்ற - அப்பெரிய மலைக்குகைக் கண்ணிருந்த, அனைத்தும் -
பொருள்கள் எல்லாம், விரிந்த - விளங்கித் தோன்றின; வாயொடு வெளி உகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரம் அனைத்தும் - அச்சிங்கத்தினுடைய வாயும் வெளிப்பட்ட நகங்களும் பருத்த
கால்களும் சுருண்ட மயிரையுடைய பிடரியும் ஆகிய உறுப்புக்கள் அனைத்தும், பணைத்த -
சினத்தாலே பருத்தன; சுடர்அணிவளை எயிற்று ஒளியால் - ஒளிர்ந்து அழகுடையனவாய்
வளைந்துள்ள பற்களின் ஒளியால், ஆயிடை இருள் இரிந்தது - அக்குகையின் கண் உள்ள
இருள் அகன்றது; அங்கு நின்று அவ்வரி எழுந்தது - அவ்விடத்தினின்றும் அவ் வுண்மைச்
சிங்கம் புறப்பட்டது, (எ - று)

 

     (பாடம்) 1. கனல்வ.