(இ - ள்.) அழிந்த கோளரி - திவிட்டனால் கொல்லப்பட்ட அச்சிங்கத்தினுடைய, குருதி - செந்நீர், அது அரும் கடம் களிற்றோடு ஒழிந்த வெண்மருப்பு - அவ்வரிமா முன்னர்க் கொன்ற யானைகளின் வெள்ளிய கோடுகள் உடலைவிட்டு வேறா ஒளிந்து கிடந்ததனவும், உடைந்தவும் - அக்கோடுகள் உடைந்தனவும், ஒளிமுத்தமணியும் - உடைந்த அக்கோட்டினின்றும் சிதறி ஒளியுடன் கிடந்த முத்தாகிய மணிகளும் ஆகியவற்றை வரன்றிக் கொண்டு, பொழிந்து கல்லறைப் பொலிவது - ஒழுகி அக்கற்பாறைக்கண் விளங்குவது; குலிகச்சேறலம்பி இழிந்த கங்கையின் அருவியொத்து - சாதிலிங்கக் குழம்பை அளையிஇப் பாயும் கங்கையாற்றின் அருவியைப்போல, அவ்விடத்தே இழிந்தது-அம்மலைச்சாரலில் ஓடிற்று,(எ-று.) அவ்வரிமாவின் குருதி, ஆண்டுக்கிடந்த ஆனைவெண்கோடு முதலியவற்றை அளைந்து சாதிலிங்கக் குழம்பை அலம்பிப் பெருகிய கங்கையின் அருவி ஒத்து ஒழுகியது. கோளரிக்குருதி பொலிவது அவ்விடத்தே கங்கை அருவியை ஒத்து இழிந்ததென்க. |
(இ - ள்.) இகலோன் - போர் ஆற்றல் மிக்கவனும், புகழோன் - புகழ்மிகுந்தவனும் ஆகிய திவிட்டன், யாதும் மற்றதற்கு உவந்திலன் வியந்திலன் - ஒருசிறிதும் இப்பெருஞ் செயல் செய்தமைபற்றி மகிழ்தலும் வியத்தலும் இலனாய், ஓதநித்திலம் புரிவளை ஒளியவற்குறுகி - கடலிற்பிறந்த முத்துப்போன்றும் வலம்புரிச் சங்குபோன்றும் வெள்ளொளிவண்ணனாகிய விசயனிடம் சென்று, ஏதம்மற் றிது கடிந்தனன் - இத்தீமையை அழித்தொழித்தேன், அடிகள் - அடிகளே! இன்னினி - இப்பொழுதே, போதனபுரத்துக்கு - நம் போதனமாநகரத்திற்கு, போதும் - செல்வோம், என்று உரைத்தனன் - என்று கூறினான் (எ - று) அமரர்களும் வியத்தற்குரிய இவ்வருஞ்செயலைச் செய்த திவிட்ட நம்பி, அதுபற்றி உவப்பும், வியப்பும் இலனாய் விசயனிடம் சென்று, ‘இத்தீமை தவிர்க்கப்பட்டது. இனியாம் போதனத்திற்குச் செல்வேம்‘ என்றான் என்க. உவத்தலும், வியத்தலும் இலன் என்றது, நம்பியின் பெருந்தகைப் பண்பினைப் பாராட்டியபடி. |