(இ - ள்.) புள்ளும் கொல்லென வொலிசெயும் - பறவைகளும் “கொல்“ என்று ஆரவாரிக்கும், பொழில்புடையுடைய - சோலைகளைப் பக்கத்தே உடையனவாய், கள்ளின் நுண் துளி கலந்து கால் அசைத்தொறும் - காற்று தேனினது நுணுகிய துளிகளை அளாவிக்கொண்டு இயங்குந்தோறும், கமழ - மணம் கமழாநிற்பவும், உள்ளும் - உள்ளிடங்களிலும், தாதுகொண்டு - மகரந்தத்துகளை அப்பிக்கொண்டு, ஊதுவண்டு அறாதன - தேன் தேரும் வண்டுகளை ஒழியாதனவாயும், ஒளிசேர் - ஒளியையுடையனவாய், வெள்ளென் தோன்றுவ - வெண்மையாகக் காணப்படுவன, விறலோய் - ஆற்றல் மிக்கோனே, கயம் அல்ல - குளங்கள் போலத் தோன்றுவனவேனும் அவைகள் உண்மையில் குளங்கள் அல்ல, பளிக்கறை - பளிக்குப் பாறைகள் ஆகும், (எ - று.) பறவைகள் ஆரவாரிக்கவும் சோலைகளைப் பக்கத்தே யுடையனவும் ஊது வண்டறாதனவும் காற்றுத்தேனைத் துளித்தல் அறாதனவுமாயின என்க. வெள்ளெனத் தோன்றுவன தண்கயம் அல்ல; பளிக்குப் பாறையாங் கண்டாய் என்றான் என்க. |
(இ - ள்.) ஆளி மொய்ம்ப - அரிமாவை ஒத்த ஆற்றலுடையோனே! காள்ஐ வண்ணத்த களிவண்டு - கரிய அழகிய நிறமுடைய களிப்பு மிக்க அளிகள், கதுவிய துகளால் - போர்க்கப்பட்ட மகரந்தத்தோடு, தாளைமூசிய - நாளங்களில் மொய்த்தலையுடைய, தாமரைத் தடம்பல - தாமரைகள் செழிப்புற்றுள்ள இடங்கள் பல, அவற்றுள் - அவ்விடங்களுள், அகலிலை அலரொடுங் கிழிய - அகன்ற தாமரையின் இலைகளும் மலர்களும் கிழிந்து போம்படி, வாளை பாய்வன - வாளைமீன்களும் விசைத்துப் பாய்கின்றன, |