கயமல்ல - அங்ஙனமிருந்தும் அவைகள் நீர்நிலைகளல்ல, மறவோய் - வீரனே! வனத்திடர், இடையறாது அருவி பாய்ந்தோடும் காட்டினுள்ள திடர்களேயாகும், (எ - று.) காளம் ஐவண்ண எனக் கண்ணழித்துக் கொள்க. காளம் - கருநிறம். ஐ - அழகு. காளம் காள் என்று ஈற்றுயிரும் மெய்யும் கெட்டு நின்றது, மலைச்சாரலில் உள்ள சாய்ந்த திடர்களில் இடையறாது நீரோட்டம் நிகழ்தலின், அங்குத் தாமரைகள் செழிப்புற்றுள்ளன. வாளைகள் துள்ளுகின்றன என்பதாம். |
(இ - ள்.) மன்னும் வார் துளித்திவலைய - நிலைபெற்ற நீண்ட நீர்த் துளியாகிய திவலையை உடையன, மலைமருங்கு இருண்டு - மலையின் பக்கத்தே குவிந்து இருள்செய்து, துன்னு மாந்தர்கள் பனிப்புற - பக்கத்தே வரும் மக்கள் அச்சத்தால் நடுங்க, துணைமையோடு அதிர்வ - கூட்டத்தோடே முழங்குவ; இன்னவாம் பல வுருவுகள் - இப்படிப்பட்ட தன்மையுடைய பலவாகிய உருவங்கள், இவற்றினுள் இடையே மின்னும் வார்ந்தன - இவ்வுருவங்களின் ஊடே மின்னல்களும் தோன்றி நீளாநின்றன, முகில்அல்ல - இவ்வுருவங்கள் - மேகங்களேயோ எனில் அல்ல, விறலோய் - வீரனே, களிறுகள் - இவைகள் உண்மையில் யானைக்கூட்டங்களே யாகும், (எ - று.) மலைகளிலே கூடி இருண்டு மின்னுடன் தோன்றுவன முகிற் கூட்டங்கள் போன்று தோன்றுகின்றன. அவை முகிலல்ல களிற்றுக் குழாமே காண் என்றான் என்க. துளி - மதத்துளி. மின்னுவார்தல் - யானைகளின் மருப்பொளி தோன்றுதல். |