கூற என் நெஞ்சத்தே அவா உண்டாயிற்று; அக்காரணத்தால் இந்நூலைச் செய்கின்றேன். யான் சிறுமையுடையேன் ஆதலின் இதன்கண் குற்றம் காணப்படுதல் இயல்பே. குற்றம் நிகழுமாயினும் சான்றோர் பிறர் குற்றத்தைப் பொறுக்குமியல்புடையராதலின் அதுபற்றி இதனைச் செய்யத்துணிந்தேன் என்று இதன்கண் நூற்சிறப்பும் அவையடக்கமும் ஒருங்கே கூறினர் என்க. பெரியோர் பிறர்குற்றம் மறைக்கும் இயல்புடையார் என்பதனை, |
| “அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.“ (குறள் - 620) என்னும் அருமைத் திருக்குறளாலும் உணர்க. |
சான்றோர் குணநலம் பேசுதலும், அத்தகைய நூலொடு பயில்தலும் ஆற்றவும் நலந்தருஞ் செயல்களாதலை, |
| “சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை எற்குணர்த்தரி தெண்ணிய மூன்றனுள் முற்குணத்தவ ரேமுத லோரவர் நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ“ |
(கம்பராமா - பாயிரம் - 2) எனவரும் கம்பநாடர் கருத்தானுமுணர்க. இனி இங்ஙனம் கூறவே பாயிரப் பொருள் எட்டனுள் ஒன்றாகிய ‘பயனும்‘ ஓதியவாறாதல் உணர்க. இப்பால் என்றது வடவேங்கடம் தென்குமரியாயிடைக் கிடந்த இத் தமிழ்கூறு நல்லுலகத்தே என்பதுபட நின்றது. உற்று - உறு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். உறு - மிகுதிப் பொருளது. கிளர்தல் - மேன்மேலும் தூண்டாநிற்றல். நூல் என்பது சுவடிகளுக்கு உவம ஆகுபெயர். என்னை? |
| “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியுமாறு“ (நன் - பா - 24) |