(இ - ள்.) இருது வேற்றுமை யின்மையால் - கார்கூதிர் முதலிய பருவங்கள் மாறிவருதல் இவ்விடத்தே இல்லாமையால், சுருதி மேற்றுறக் கத்தினோடு - மெய்ந்நூல்களாற் கூறப்படும் மேலிடத்துள்ள சுவர்க்க நாட்டிற்கும் இந்நாட்டிற்கும், வேற்றுமை அரிது ஆகவே கருது - வேற்றுமை காண்டல் இயலாதென்றே நினைக்கக் கடவாய், வேல்தடம் கையினாய் - வேற்படை ஏந்திய பெரிய கைகளையுடைய திவிட்ட நம்பியே, (எ - று.) கார் முதலிய பருவ வேற்றுமைகள் இவ்விடத்தே நிகழாமையால் இவ்விடம் துறக்கத்தை ஒக்கும் என்றான் என்க. இருதுவில்லாதநிலை “என்னலும் இருது வெல்லாம் ஏகிய யாவும் தத்தம் பன்னரும் பருவஞ் செய்யா யோகிபோற் பற்று நீத்த பின்னரும் உலகமெல்லாம் பிணிமுதற் பாசம்வீசி துன்னருந் தவத்தின் எய்தும் துறக்கம்போற் றோன்றிற் றன்றே“ எனக் கம்பநாடர் இச் செய்யுட் கருத்தைத் தம் செய்யுளில் காட்டியிருத்தல் காண்க. (கம்பரா -மாரீசன்வ - 103) |
(இ - ள்.) தொல்லுறு சுடர்போலும் - பழமையுடைய ஞாயிற்று மண்டிலத்தைப் போன்று, ஒளிசூழ்மணிப் பாறைக் கல்லறையவை - ஒளிக்கற்றைகள் சூழ்ந்துவிளங்கும் மாணிக்கப் பாறையாகிய கல்லிடத்தே, கோங்கின் கடிமலர் கலந்து உராய் - கோங்கமரத்தினது மணமலர்கள் செறிந்துபரவி, மல்லுறுவரை மார்ப - மற்போர்வல்ல மார்பையுடையோனே! வளரொளியின் முளைக்கும் - மிக்க ஒளிப்பிழம்போடு தோன்றுகின்ற, எல் உறு - ஞாயிறு தோன்றாநின்ற, சுடர்வானத்து - ஒளிகலந்த விசும்பின், எழிலவாய் இனியவ்வே - அழகையுடையவாய்க் காட்சிக்கு இறப்பவும் இனிமை தருவனவாம், (எ - று.) மணிப்பாறைகள் கோங்கின் கடிமலரோடே ஒளிவீசித் திகழ்தல் ஞாயிறு தோன்றும் வானம்போன்று இனிய என்றான் என்க. |